திம்புள்ள, பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் தனி வீடொன்றில் இரண்டு பெண்களின் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் கடந்த (31) திகதி பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் நகரசபை ஊழியர்கள் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வீட்டுக்குள் நுழைந்து, வீட்டில் இருந்த பெண்கள் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு தங்க சங்கிலிகளை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
80 வயதான பெண்ணும், 35 வயதுடைய பெண்ணுமே வீட்டில் இருந்துள்ளனர்.
இதனையடுத்து இரு பெண்களும் சத்தமிட அங்கு வந்த அயலவர்களின் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிய கொள்ளையர்கள் சென்ற வீதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெரா காட்சிகளின் ஊடாக மோட்டார் சைக்கிளின் பதிவு இலக்கத்தின் அடிப்படையில் திம்புள்ள – பத்தன பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் நுவரெலியா தடயவியல் பிரிவு பொலிஸார் மோப்ப நாயுடன் சென்று மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
எனினும் கொள்ளையர்கள் இருவரும் முகத்தை மூடிக்கொண்டு வந்திருப்பதால் அவர்கள் குடியிருப்பாளர்களை நன்கு அறிந்தவர்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.










