“ மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் வேலைத்திட்டம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.” – என்று அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கஉரை தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணைமீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
“ விவசாயிகள், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட காணி உரிமை இல்லாது இருந்த மக்களுக்கு காணி உரிமை வழங்குவதற்கு எந்தவொரு தலைவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே அதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளார். இதற்கமைய காணி உரிமை வழங்கும் உறுமய (உரித்து) வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்கள் மத்தியில் நம்பிக்கையும் பிறந்துள்ளது.
குறிப்பாக மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமை வழங்கும் திட்டத்தை நாம் துரிதப்படுத்த வேண்டும். இது தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்கும்.” – எனவும் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா கூறினார்.