மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி புசல்லாவை நகரில் இன்று அறவழி பேரணி முன்னெடுக்கப்பட்டது. இதன்போது துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
ஜே.வி.பியின் பெருந்தோட்டதுறைக்கான தொழிற்சங்க அமைப்பான, அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
புசல்லாவை நகரசபைக்கு அருகில் ஆரம்பமான அறவழி பேரணி, புசல்லாவை மெல்போர்ட் பாலம்வரை வந்தடைந்தது. புசல்லாவை நகரில் உள்ள கடைகள் மற்றும் நகர் பகுதிக்கு வந்திருந்த மக்களுக்கு துண்டு பிரசுரமும் விநியோகிக்கப்பட்டது.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு தற்போது நாட் சம்பளமாக 1000 ரூபா வழங்கப்படுகின்றது எனக் கூறப்பட்டாலும் பலருக்கு சம்பளம் முழுமையாக கிடைப்பதில்லை. இதற்கிடையில் விலைவாசி 300 வீதத்தால் அதிகரித்துள்ளது. எனவே, தோட்டத் தொழிலாளர்களின் நாட் சம்பளமாக 2 ஆயிரம் ரூபா வழங்கப்பட வேண்டும் என பேரணியில் பங்கேற்றவர்கள் வலியுறுத்தினர்.
அகில இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் ஜே.எம்.ஏ. பேமரத்ன, கண்டி மாவட்ட தோட்டப்பகுதிக்கான அமைப்பாளர் சிவகுமார் பிரகாஷ் உட்பட சங்கத்தின் செயற்பாட்டாளர்கள் பலர் இதில் பங்கேற்றிருந்தனர்.