பெருந்தோட்டப் பகுதிகளில் பாடசாலை இடைவிலகல் அதிகரிப்பு!

கட்டுரையாளர் – க.பிரசன்னா
நன்றி – தினக்குரல்

சமீப காலங்களில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் மற்றும் இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளதாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றது. பெருந்தோட்ட பாடசாலைகள் உள்ளிட்ட தமிழ்மொழி மூல பாடசாலைகளில் பாடசாலை இடைவிலகல் என்பது தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் நிகழ்வாகவே பார்க்க வேண்டியுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள பெருந்தோட்டங்களில் தற்போது இந்நிலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவற்றை தடுப்பதற்கான எந்த முயற்சிகளும் எடுக்கப்படவில்லை. மாணவர்களின் இடைவிலகல் என்பது இன்று தேசிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

தற்போதைய பொருளாதார நிலையால் மாணவர்களின் இடைவிலகல் அதிகரிக்கப்படுமே தவிர குறையாது எனவும் தற்போது அதிகரித்துள்ள வாழ்க்கைச் செலவு காரணமாக பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள பல மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து விலகியுள்ளதாகவும் மத்திய மாகாணத்தில் மாத்திரம் கடந்த வருடத்தில் 1986 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களின் அடிப்படையில், ஹட்டன், நுவரெலியா, கொத்மலை மற்றும் கம்பளை கல்வி வலயங்களில் அதிகளவு மாணவர்கள் இடை விலகுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய ரீதியில் பாடசாலையிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 2012 இல் 39,899 ஆக இருந்த பாடசாலையை விட்டு விலகும் மாணவர்களின் எண்ணிக்கை 2021 இல் 19,924 ஆக குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். 2012 – 39,899; மாணவர்களும் 2013 – 37,687; மாணவர்களும் 2014 – 34,358; மாணவர்களும் 2015 – 30,055; மாணவர்களும் 2016 – 31,539; மாணவர்களும் 2017 – 28,225; மாணவர்களும் 2018 – 26,077 மாணவர்களும் 2019 – 27,590; மாணவர்களும் 2020 – 22,765 மாணவர்களும் 2021 – 19,924 மாணவர்களும் இடைவிலகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலப்பகுதியில் காணப்பட்ட நெருக்கடி நிலைமைகளை விடவும் 2020 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொவிட் தொற்று, அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் காரணமாக பாடசாலைக் கல்வி கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டது. இதனால் அதிகமான மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் நிலையும் உருவானது. மாறாக பல பாடசாலைகள் தங்களுடைய பாடசாலை பரீட்சை பெறுபேறுகளை உயர் வீதத்தில் காட்டுவதற்காக திட்டமிட்டு மாணவர்களை புறக்கணித்தமையும் இடைவிலகல்களை தூண்டியது.

இவ்விடயம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் நுவரெலியா மாவட்ட செயலாளர் வேலு இந்திரசெல்வன் கருத்து தெரிவிக்கையில், “நுவரெலியா மாவட்டத்திலுள்ள கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் அதிகரித்துள்ளது. மத்திய மாகாண கல்வித் திணைக்களத்தின் தகவல்களின்படி, கடந்த வருடத்தில் 1986 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பல்வேறு காரணங்களை குறிப்பிட முடியும். இவற்றில் பொருளாதார நெருக்கடி நிலை பிரதானமாகும். பாடசாலையின் நாளாந்த செயற்பாடுகளை ஈடுசெய்வதற்கு பெற்றோர் மீது அதிக சுமையை கல்வி அமைச்சு சுமத்தி வருகின்றது. பாடசாலை மாணவர்களின் சத்துணவு கேள்விக்குரியாகியுள்ளது. கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை, பாதணிகள் என்பன விலை அதிகரிப்புக்கு உட்பட்டுள்ளது. இந்நிலையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் பெருந்தோட்டப் பிள்ளைகள் இவற்றைப் பெற்றுக் கொள்வதில் சிரமம் மற்றும் போக்குவரத்துக்கான செலவீனம் போன்ற காரணங்களால் இடைவிலகும் நிலை

அவர் மேலும் தெரிவிக்கையில், “இவ்வாறு தொடர்ச்சியாக பாடசாலை இடைவிலகல் அதிகரிக்குமாயின் சமூகத்தின் கல்வி வளர்ச்சியில் பாரிய பின்னடைவு ஏற்படும். தற்போது பெருந்தோட்ட மாணவர்கள் கல்வியில் முன்னோக்கிச் செல்லும் ஒரு நிலை காணப்படுகையில் இது பாரிய தாக்கத்தை செலுத்தும். அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. பரீட்சை பெறுபேறுகளை 100 வீதமாக தக்கவைத்துக் கொள்வதற்கும் மாணவர்களை திட்டமிட்டு வெளியேற்றும் நிலை காணப்படுகிறது. பெற்றோரும் பிள்ளைகளின் கல்வி தொடர்பில் அக்கறையின்மையுடன் செயற்படுகின்றனர். மாணவர்கள் இடைவிலகுவதை அவதானிப்பதற்காக பொலிஸ் அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர், கல்வி பணிப்பாளர், பாடசாலை அதிபர் உள்ளடங்கிய குழுக்கள் காணப்படும் நிலையிலும் அவற்றின் செயற்பாடுகளில் முன்னேற்றம் இல்லை. எனவே மாணவர்களின் இடைவிலகலை தடுப்பதற்கான பொருத்தமான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.

இதேவேளை மத்திய மாகாணத்தில் மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் தொடர்பான தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக கல்வி வலயங்களிடமிருந்து பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்த போதும் பெரும்பாலான வலயக் கல்வி அலுவலகங்கள் தகவல்களை வழங்குவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது. மேலும் குறித்த தகவல்களை வழங்குமாறு தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு உத்தரவிட்டுள்ள போதும் அவற்றை புறக்கணிக்கும் நிலையே காணப்படுகிறது. இதன் மூலம் மாணவர்களின் இடைவிலகலில் வலய கல்வி அலுவலகங்களுக்கும் அதிக பங்கிருப்பதாகவே கருத வேண்டியுள்ளது. எனினும் சில வலயக் கல்வி அலுவலகங்கள் வழங்கிய தகவல்கள் பின்வருமாறு அமைந்துள்ளது.

🛑 ஹங்குராங்கெத்த கல்வி வலயம்

ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தின் தமிழ்மொழிமூல பாடசாலைகளில் 2015 – 2020 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 217 மாணவர்கள் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப பொருளாதார நிலை, தமது பிள்ளை தொடர்பில் பெற்றோரின் அக்கறையின்மை, பெற்றோரின் கல்வி நிலை, பாடசாலைக்கும் வீட்டுக்கும் உள்ள தூரம் மற்றும் பெற்றோர் பிள்ளைகளுடன் வசிக்காமை போன்றவை இடைவிலகலுக்கான காரணங்களாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2023 இல் ஹங்குராங்கெத்த கல்வி வலயத்தில் 79 மாணவர்கள் இடைவிலகியுள்ளனர்.

🛑 நுவரெலியா கல்வி வலயம்

நுவரெலியா கல்வி வலயத்தின் தமிழ்மொழிமூல பாடசாலைகளில் வருடாந்தம் 200 மாணவர்கள் மாத்திரமே பாடசாலை கல்வியை இடைநிறுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார பிரச்சினை மற்றும் பெற்றோர் இடப்பெயர்வு காரணமாக இந்த இடைவிலகல் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மத்திய மாகாண கல்வித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் நுவரெலியா கல்வி வலயத்தில் 570 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நுவரெலியா கல்வி வலயத்தில் அதிகமாக தமிழ்மொழிமூல பாடசாலைகளே காணப்படும் நிலையில் வலயக் கல்வி அலுவலகம் வழங்கியுள்ள தகவல்களில் நம்பிக்கை கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.

🛑 வலப்பனை கல்வி வலயம்

வலப்பனை கல்வி வலய தமிழ்மொழி மூல பாடசாலைகளில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் 65 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாகவும் 2015 – 2018 வரையான காலப்பகுதியில் இடைவிலகிய மாணவர்கள் தொடர்பான உரிய தகவல்களை பாடசாலைகள் வழங்கவில்லையெனவும் தெரிவித்துள்ளது. பெற்றோரின் அறியாமை மற்றும் பெற்றோரின் பொருளாதார பிரச்சினைகள் என்பன இடைவிலகலுக்கான காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. 2023 இல் 74 மாணவர்கள் இடைவிலகியுள்ளதாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹட்டன் கல்வி வலயம்

ஹட்டன் கல்வி வலய தமிழ் மொழிமூல பாடசாலைகளில் 2015 – 2019 ஆம் ஆண்டு காலப்பகுதியில் 2406 மாணவர் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளனர். 2014 ஆம் ஆண்டுக்கு முன்னர் கட்டாய கல்வியை பெற்றுக்கொள்ள வேண்டிய 5 – 16 வயதுக்குட்பட்ட மாணவர்களில் பல்வேறு காரணங்களால் பெருந்தொகையான மாணவர்கள் இடைவிலகியுள்ளனர். 2015 இல் 686 மாணவர்களும் 2016 இல் 543, 2017 இல் 471, 2018 இல் 428, 2019 இல் 278 மாணவர்களும் பாடசாலை கல்வியைவிட்டு இடைவிலகியுள்ளனர்.

ஹட்டன் கல்வி வலய பெருந்தோட்டப் பாடசாலைகளில் மாணவர் இடைவிலகலுக்கு பெற்றோரின் வறுமை நிலை மற்றும் வெளிநாடு சென்ற பெற்றோர், மாணவர்களின் போசணை குறைபாடும் மெல்ல கற்போரும் சுகயீனமுற்ற மாணவர்கள், வீட்டுச்சூழலும் சமூகச்சூழலும் பெற்றோர், பாதுகாவலரின் கவனயீனம், பாடசாலைகள் பல கவர்ச்சிகரமான சூழலை கொண்டிராமை போன்றன பிரதான காரணங்களாக இருக்கின்றன. மேற்படி காரணங்களால் ஆரம்ப பிரிவு வகுப்புகளில் இடைவிலகல் மிகவும் குறைவாகவும் தரம் 6 – 11 வகுப்புக்களில் இடைவிலகல் அதிகமாகவும் காணப்படுகின்றன.

தரம் 5 வரை ஆரம்ப பாடசாலைகளில் கல்வி கற்று தரம் 6க்கு புதிய பாடசாலைக்கு செல்கின்ற மாணவர்கள் சந்திக்கின்ற சவால்கள் சில மாணவர்களின் இடைவிலகளுக்கு காரணமாகின்றன. பெருந்தோட்ட மக்களின் வாழ்வாதாரம் போதுமானதாக இல்லாமை, தங்கள் பிள்ளைகளை சுகாதார ரீதியாக, கல்வி ரீதியாக முறையாக பராமரிக்க முடியாமை முக்கிய காரணியாகும். சில பாடசாலைகளில் காணப்படும் பொருத்தமற்ற கற்றல் சூழல், போதுமான வளங்கள் இல்லாமை குறிப்பாக விளையாட்டு மைதானம் போன்ற பிரதான வளங்கள் மாணவர்களின் இணைப்பாடவிதான செயற்பாடுகளை தொடர்ந்து செயற்படுத்த தடையாக இருக்கிறது.

மேலும் பாடசாலை அபிவிருத்தி வளங்கள் நிதி ரீதியாக வளமாயில்லாமை காரணமாக அதிபர்கள் பாடசாலை கற்றல் சூழலை மாணவர்களுக்கு கவர்ச்சிகரமாக்க சந்தர்ப்பமில்லாமல் போயுள்ளதாகவும் எவ்வாறாயினும் மாணவர்களின் தொடர்ச்சியான வரவை அதிகரிக்க பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் கட்டாயக் கல்விக்குழு உயிர்ப்பிக்கப்பட்டுள்ளமை, ஆரம்பகல்வி மாணவர்களுக்கு போசாக்குணவு வழங்கப்படுகின்றமை, மாணவர் விடுமுறை அட்டை அறிமுகம், அதிபர், ஆசிரியர்களின் வகைக்கூறலை செயலாற்றுகை மதிப்பீட்டில் சரியாக கணிப்பிட்டு ஆலோசனை வழிகாட்டல் வழங்கப்படுகின்றமை, வலய மட்டத்தில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பாசறைகளை நடத்துதல் போன்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டன் கல்விப் பணிமனை குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை ஹட்டன் கல்வி வலயத்திலுள்ள நான்கு கோட்டங்களிலும் 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 783 மாணவர்கள் பாடசாலை கல்வியிலிருந்து இடைவிலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோட்டம் 1 இல் 42 பாடசாலைகளைச் சேர்ந்த 229 மாணவர்களும் கோட்டம் 2 இல் 36 பாடசாலைகளைச் சேர்ந்த 265 மாணவர்களும் கோட்டம் 3 இல் 35 பாடசாலைகளைச் சேர்ந்த 271 மாணவர்களும் சிங்கள மொழி மூல பாடசாலைகளை கொண்டுள்ள கோட்டம் 4 இல் 37 பாடசாலைகளைச் சேர்ந்த 18 மாணவர்களும் இவ்வாறு இடைவிலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

🛑 ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரி

ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரியில் உயர்தரத்தில் பல்வேறு பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவர்களில் பலர் இடை நடுவே கல்வியை கைவிடுவது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவ்வாறு இடைவிலகியமைக்கான காரணத்தை அடையாளம் கண்டு மீண்டும் மாணவர்களை உள்ளீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையையும் குறித்த பாடசாலை மேற்கொள்ளவில்லை. 2015 – 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியில் உயர்தரத்திலுள்ள ஆறு பிரிவுகளில் இருந்து 74 மாணவர்கள் கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். (அட்டவணை 01)

இதில் உயிரியல் பிரிவிலிருந்து 11 மாணவர்களும் இயற்பியல் விஞ்ஞான பிரிவிலிருந்து 38 மாணவர்களும் வர்த்தகப் பிரிவிலிருந்து 12 மாணவர்களும் கலை பிரிவிலிருந்து 5 மாணவர்களும் நுண்கலை பிரிவிலிருந்து 3 மாணவர்களும் தொழில்நுட்ப பிரிவிலிருந்து 5 மாணவர்களும் பாடசாலை கல்வியை இடைநிறுத்தியுள்ளனர். இவ்வாறு கல்வியை இடைநிறுத்துவது பெற்றோரின் விருப்பத்துக்கு உட்பட்டே இடம்பெறுவதாகவும் ஹட்டன் ஹைலண்ட்ஸ் தேசிய கல்லூரி தெரிவித்துள்ளது.

🛑 இடைவிலகலை குறைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன?

மாணவர்களின் பாடசாலை இடைவிலகல் தொடர்பில் ஹட்டன் பிரதேச பாடசாலை அதிபரொருவரிடம் வினவிய போது, (பாதுகாப்பு கருதி பெயர் குறிப்பிடப்படவில்லை) “பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டில் இருப்பது முக்கிய காரணமாக இருக்கிறது.

எனது பாடசாலையிலுள்ள மூன்றில் ஒரு பங்கு மாணவர்களின் பெற்றோர் பிள்ளைகளுடன் இல்லை. திட்டமிட்ட போதைப்பொருள் பாவனை, கைத்தொலைபேசி பாவனை, ஆபாசப்படங்களின் நுகர்வு என்பனவும் மாணவர்களின் கல்வி நடவடிக்கையை பாதிப்பதாகவும் குறிப்பிட்டார்.

பெரும்பாலான பாடசாலைகளில் பரீட்சை பெறுபேறுகளை உயர் மட்டத்தில் தக்கவைத்துக் கொள்வதற்காக தரம் 9 – 11 வரையான வகுப்புகளில் திட்டமிட்டு மாணவர்கள் இடைவிலக்கப்படுகின்றனர். 8 ஆம் தரத்திலேயே மூன்றில் இரண்டு மாணவர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்படுகின்றனர்.

அத்துடன் பாடசாலைகள் பரீட்சைகளில் 90 வீத பெறுபேற்றை கொண்டிருக்காவிட்டால் அதிபருக்கு வழங்கப்படும் வருடாந்த சம்பள உயர்வு நிறுத்தப்படுமென மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளரினால் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சில அதிபர்கள் திட்டமிட்ட செயற்பாடுகளை முன்னெடுக்கின்றனர்.” எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே பாடசாலைகளில் மாணவர்கள் இடைவிலகுவதற்கு அதிபர்களுக்கு வழங்கப்படும் அழுத்தங்களும் காரணமாக இருக்கின்றது. மத்திய மாகாண கல்வி அமைச்சு தமிழ் கல்வியை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதா? இவ்வாறு திட்டமிட்டு இடம்பெறும் செயற்பாடுகளுக்கு கல்வியியலாளர்கள், அரசியல்வாதிகள் எவ்வாறான தீர்வுகளை முன்வைக்கப் போகின்றனர். உயர்தரத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் கல்வி கற்கும் மாணவரொருவர் மாதாந்தம் 40 – 50 ஆயிரம் ரூபாவை கல்விக்காக செலவிட வேண்டிய நிலை காணப்படுகின்றது. இது பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்வி என்ற நிலையை உருவாக்குகிறது. மலையகத்தில் கணித, விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்களின் பங்குபற்றுகை குறைவு என குதிக்கும் தலைவர்கள் இவ்வாறான விடயங்கள் தொடர்பிலும் சிந்திக்க வேண்டும்.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles