2021 ஜனவரி முதல் அடிப்படை நாட் சம்பளமாக ஆயிரம் ரூபாவை பெற்று கொடுக்க முடியவில்லை என்றால் கூட்டு ஒப்பந்தத்தில் கைசாத்திடும் தொழிற்சங்கங்கள் உடன் அதிலிருந்து விலக வேண்டும். இல்லையேல் மலையகத்தில் புதுவிதமான புரட்சி வெடிக்கும் – என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் இளைஞர் அணி தலைவர் பா. சிவநேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” காலம் காலமாக கூட்டு ஒப்பந்தம் எனும் அடிமை சாசனத்தை வைத்து கொண்டு மலையக மக்களை கூட்டாக ஏமாற்றி வரும் தொழிற்சங்கமும் கம்பனிகளும் உழைப்பிற்கு ஏற்ற ஊதியத்தை தர மறுக்கின்றன. இது இன்று மட்டும் அல்ல காலம் காலமாக – பரம்பரை பரம்பரையாக, எமது மக்களை அடகு வைத்து சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல் பரம்பரைக் கூட்டங்களே இதற்கு முழு பொறுப்பு கூற வேண்டும்.
சம்பள விடயத்தை தவிர கூட்டு ஒப்பந்தம் ஊடாக எமது மக்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகள் தற்போது கிடைப்பதில்லை. முதுகெலும்பு இல்லாத தலைமைத்துவமே இதற்கு காரணமாகும்.
எனக்கு அங்கிகாரத்தை தாருங்கள் கம்பெனிகாரர்களை விரட்டுவேன் என்று தம்பட்டம் அடித்த தம்பிகள், இன்று கம்பெனிக்கு பயந்து பெட்டி பாம்பாகிவிட்டனர்.
எனவே ஜனவரி 10 ஆம் திகதிக்குள் சம்பளம் 1000/=ரூபாய் பெற்று கொடுக்க முடியவில்லை என்றால் பாரிய புரட்சியை கைசாத்திடும் தொழிற்சங்கங்கள் எதிர் நோக்க வேண்டி வரும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.” – என்றார்.
