பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் சபாநாயகரைச் சந்தித்தார்

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்டீபன் ட்விக் (Stephen Twigg) சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை (13) பாராளுமன்றத்துக்கு வருகை தந்த அவர் சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற உயர் அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம், கல்வி அமைச்சரும் பாராளுமன்றச் சபை முதல்வருமான கௌரவ (கலாநிதி) சுசில் பிரேமயந்தவையும் பாராளுமன்றத்தில் சந்தித்தார். இதேவேளை, இராஜாங்க அமைச்சர் கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ யதாமினி குணவர்தன அவர்களுடனும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற அதிகாரிகளுக்கான மத்திய கற்றல் மையமாக ஆரம்பிக்கப்பட்ட பொதுநலவாயப் பாராளுமன்ற கல்விக்கூடம் (CPA Parliamentary Academy) தொடர்பில் ஸ்டீபன் ட்விக் வலியுறுத்தியதுடன், இதன் நோக்கம் பாராளுமன்றங்கள் மற்றும் முக்கிய தலைப்புகள் பற்றி கற்க விரும்புபவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்றார்.

மேலும், பொதுநலவாய பாராளுமன்றங்களிடையே பெண்களின் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் தொடர்பிலும் அவர் விளக்கினார்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் மற்றும் அவருடன் வருகைதந்த பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் மூலோபாய மற்றும் செயற்பாட்டுப் பிரதானி செல்வி எமில் டேவிஸ் ஆகியோர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசாநாயக்க, பாராளுமன்றப் பணியாட்கள் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான குஷானி ரோஹனதீர, பாராளுமன்ற உதவிச் செயலாளர் நாயகம் டிகிரி கே. ஜயதிலக்க ஆகியோருடனும் கலந்துரையாடல் மேற்கொண்டனர். அதனையடுத்து அவர்கள் பாராளுமன்றத்தைப் பார்வையிட்டனர்.

பொதுநலவாய பாராளுமன்ற சங்கத்தின் செயலாளர் நாயகம் பாராளுமன்ற சிரேஷ்ட அதிகாரிகளை சந்தித்து, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றங்கள் தொடர்பிலும் கலந்துரையாடினார்.

Related Articles

Latest Articles