‘பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிரே முக்கியம்’

பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிர் முக்கியம். எனவே, வைத்தியர்கள் உட்பட சுகாதார தரப்பால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளை அரசு செயற்படுத்த வேண்டும். தற்போதைய சூழ்நிலையிலும் ஏகாதிபத்திய ஆட்சியை முன்னெடுப்பதற்கு முற்படக்கூடாது – என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகவியலாளர் மாநாடு   அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மேற்கண்டவாறு வலியுறுத்தினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ கொரோனா வைரஸ் வேகமாக பரவிவருவதால் நாடு தற்போது பயங்கரமான கட்டத்தில் உள்ளது. மக்கள் வீடுகளுக்குள்ளேயே செத்துமடியும் பேரவலம் ஏற்பட்டுள்ளது. இந்நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகளை எடுக்காமல், கடவுள்தான் காக்க வேண்டும் என்ற தொனியில் அரசு பிரச்சாரம் முன்னெடுக்கின்றது. இப்படியொரு அரசு தேவைதானா?

சீனாவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டபோதே குறித்த வைரஸ் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினோம். எமது தரப்பு கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதன்பின்னர் தடுப்பூசி வாங்கும் நடவடிக்கையை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தினோம். அதனையும் அரசு செய்யவில்லை.

மாறாக சபாநாயகர், சுகாதார அமைச்சர் உள்ளிட்டவர்கள் பாணி குடித்தனர். பாணை ஆற்றில் போட்டனர். விஞ்ஞானத்தை கைவிட்டு மூட நம்பிக்கையின் பின்னால் அரசு ஓடியது. நாட்டில் இவ்வாறு பயங்கரமானதொரு நிலைமை ஏற்படுவதற்கு இந்த அரசின் அணுகுமுறைகளே காரணம்.

வைரஸ் தொற்று ஏற்பட்ட, 17 மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி ஏற்றப்படுகின்றது. அன்று பாணி புகழ் பாடியவர்கள் இன்று தடுப்பூசியை வைத்து பிரச்சாரம் செய்கின்றனர். நிலைமை மோசடிமடைந்துள்ள நிலையில் கடவுள்தான் காக்கும் என கதையளக்கின்றனர்.

நாட்டை முடக்குமாறு விசேட வைத்தியர்கள் கோரிக்கை விடுக்கின்றனர். ஆனால் பொருளாதாரம் வீழ்ந்துவிடும் என அரசு அஞ்சுகின்றது. தமக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கு 600 பில்லியன் வரி விலக்கு வழங்கியது. பொருளாதாரத்தை சீரழிந்தது. பொருளாதாரத்தைவிடவும் மக்களின் உயிரே முக்கியம்.” – என்றார்.

Related Articles

Latest Articles