பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டு மாத்தறை வெலிகம பெலேன பகுதியில் ஹோட்டல் ஒன்றின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து தேசபந்து தென்னகோன் தலைமறைவானார். அவரை கைது செய்வதற்கு பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை இடம்பெற்றுவந்தது.
இதற்கிடையில் தன்னை கைது செய்யுமாறு பிறப்பிக்கப்பட்ட உத்தரை இரத்து செய்யுமாறு கோரி தேசபந்து தென்னகோர் சார்பில், அவரது சட்டத்தரணியால் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாமல் மேல்முறையீட்டு நீதிமன்றினால் நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே தேசபந்து தென்னக்கோன் இன்று காலை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்திருந்தார். குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வரை அவர் நீதிமன்ற சிறைக் கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
பின்னர் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதையடுத்து தேசபந்து தென்னக்கோனை நாளை வியாழக்கிழமை (20) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.