‘போடைஸ் விபத்துக்கு அரச அதிகாரிகளின் அசமந்தபோக்கே காரணம்’

” ஹட்டன் போடைஸ் பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்திற்கு காரணம் அரசாங்க அதிகாரிகளின் அசமந்த போக்காகும். இந்த பாதை தொடர்பாகவும் இந்த பாதையின் பாதுகாப்பு தொடர்பாகவும் நாங்கள் அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் கலந்துரையாடிப பொழுதும் இது தொடர்பான உரிய நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்கவில்லை. இது அதிகாரிகளின் அசமந்த போக்கையே காட்டுகின்றது.” என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
” ஹட்டன் போடைஸ் பிரதான பாதை தொடர்பான குறறைபாடுகள் தொடர்பாக கடந்த ஒருவருடத்திற்கு மேலாக அனைத்து கட்சியை சார்ந்தவர்களும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம். குறிப்பாக இது தொடர்பாக அந்த பிரதேச சபையின் தலைவர் குழந்தைவேல் ரவியும் இது தொடர்பாக தமது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.
அதே போல பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரமும் இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.ஆனால் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்க தவறி விட்டனர்.அதன் காரணமாக இன்று பாரிய விபத்து ஏற்பட்டு பாடசாலை மாணவர்களும் பொது மக்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
இதே போன்று பல அரச நிறுவனங்களில் அதிகாரிகள் அசமந்த போக்குடன் நடக்கின்ற காரணத்தால் பாதிக்கப்படுகின்றவர்கள் பொது மக்களே.நாங்கள் அரசியல் வாதிகள் என்ற வகையில் அலுத்தங்களை கொடுக்க முடியும் அதனை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு அதிகாரிகளிடமே இருக்கின்றது.அவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
இது மட்டுமல்ல இன்னும் பல பாதைகள் நுவரெலியா மாவட்டத்தில் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றது. அதனையும் உடனடியாக திருத்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரச அதிகாரிகளை பொறுத்த அளவில் அவர்கள் செய்கின்ற தவறுகளுக்கு பொது மக்கள் எங்களையே குறை கூறுகின்றார்கள். இவ்வாறான அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது தொடர்பாக அடுத்து நடைபெறவுள்ள நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் எனது எதிர்ப்பை தெரிவிக்கவுள்ளதுடன் குறிப்பிட்ட அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவும் எனது அலுத்தத்தை கொடுப்பேன்.
அரசாங்க அதிகாரிகள் தங்களுடைய கடமைகளை சரியாக செய்திருந்தால் இந்த விபத்தை தவிர்த்திருக்க முடியும்.அதே நேரம் பொலிஸ் திணைக்களமும் இந்த விபத்து தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு உரியவர்களுக்கு சரியான தண்டனையை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles