வீதி பாதுகாப்பு தொடர்பில் விழிப்புணர்வூட்டும் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்பில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை தனதாக்கியது இந்திய ஆளுமைகள் அணி.
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக தொடர் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் மும்பையில் நேற்றிரவு அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்திய ஆளுமைகள் அணி, டில்வான் தலைமையிலான இலங்கை ஆளுமைகள் அணியை சந்தித்தது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் குவித்தது. யுவராஜ்சிங் 60 ஓட்டங்களும் (41 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), யூசுப்பதான் 62 ஓட்டங்களையும் (36 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.அணித் தலைவர் டெண்டுல்கர் தனது பங்குக்கு 30 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து களம் கண்ட இலங்கை அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்களை எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தனதாக்கியது.
இறுதிவரை போராடியே இலங்கை அணி தோற்றது. சனத் ஜயசூரிய 43 ஓட்டங்களையும், ஜயசிங்க 40 ஓட்டங்களையும், வீரரத்ன 38 ஓட்டங்களையும் பெற்றனர்.