அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க போட்டியிட்டால், சஜித் பிரேமதாச களமிறங்கமாட்டார் என வெளியாகும் தகவல்களை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அடியோடு நிராகரித்துள்ளார்.
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயம் களமிறங்குவார் எனவும், இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை எனவும் சஜித் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” ஜனாதிபதி தேர்தலில் ரணில் போட்டியிட்டால், சஜித் போட்டியிடமாட்டார் என பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது. கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது கோட்டாவுடன் ‘டீல்’ ஏற்படுத்திக்கொண்டு என்னை தோற்கடித்தவர்களே இப்படியான பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நான் நிச்சயம் தேர்தலில் களமிறங்குவேன் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நான் போட்டியிடபோவதில்லை என அவர்கள் கூறுவதன் பின்னணி புரியவில்லை? சிலவேளை அது எனக்கான உயிர் அச்சுறுத்தலாகக்கூட இருக்கலாம். நான் மரணத்துக்கு அஞ்சும் நபர் கிடையாது. ராஜபக்சக்களுடன் எனக்கு டீலும் இல்லை. நாட்டு மக்களுடன்தான் எனக்கு டீல் உள்ளது.” – என்றார்.
