மரம் முறிந்து விழுந்து பெண் பலி: இருவர் காயம்

ஹப்புத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பங்கடிகய வைத்தியசாலைக்கு அருகில் நேற்று இரவு (25) சுமார் 7.30 மணியளவில் மரம் ஒன்று முறிந்து வீட்டின் மீது விழுந்ததில் 65 வயதுடைய பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் 80 வயதுடைய ஆண் ஒருவரும் 73 வயதுடைய பெண் ஒருவரும் பலத்த காயமடைந்த நிலையில் பங்கெடிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக தியத்தலாவ வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்தில் மரணித்த பெண் மரம் முறிந்து விழுந்த வீட்டில் சுமார் 20 வருட காலமாக வீட்டு வேலை பணியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் மீது மரம் முறிந்து விழுகையில் குறித்த பெண் வீட்டில் சமையலில் ஈடுபட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

ராமு தனராஜா

Related Articles

Latest Articles