மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் தயார்

தீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர்.

புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர்.  இதனால் வியாபாரம் களைகட்டியது.

அட்டன், தலவாக்கலை, கொட்டகலை, பூண்டுலோயா, நோர்வூட், மஸ்கெலியா, பொகவந்தலாவை, டயகம, புஸல்லாவை, நுவரெலியா, கம்பளை மற்றும் இதர மலையக நகர் பகுதிகளில் இன்று இந்நிலைமையே காணப்பட்டது. சில பகுதிகளில் மழைக்கு மத்தியிலும் வியாபார நடவடிக்கைகள் சூடுபிடித்திருந்தது.

இன்று (23.10.2022) அட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். பெருந்தோட்ட பகுதியில் தோட்ட தொழிலாளர்கள் பொருளதார ரீதியாக பெருமளவு பாதிக்கப்பட்ட இந்நிலையில் தீபாவளி முற்பணமாக சில தோட்டங்களில் மாத்திரம் 15000 ரூபா வழங்கப்பட்ட போதிலும், இம்மக்கள் குடும்பங்களுக்கு தேவையான பொருட்களை கொள்வனவு செய்ய முடியாத அளவிலும் இன்று (23.10.2022) அட்டன் நகரில் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடதக்கது.

பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளதால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலேயே தாம் பண்டிகையை கொண்டாடுவதாக  மக்கள் வெளியிடும் கருத்துகள் மூலம் அறியமுடிந்தது. வருடம் ஒருமுறைதான் பண்டிகை வருகிறது, அதனால்தான் கடன்பட்டாவது கொண்டாடுகின்றோம் என சிலர் கூறுவதை கேட்கமுடிந்தது.

கொழும்பு உட்பட வெளிமாவட்டங்களில் தொழிலுக்கு சென்றவர்கள் இன்று தமது வீடுகளை நோக்கி திரும்பினர். இதனால் பொதுபோக்குவரத்து சேவையும் அதிகரிக்கப்பட்டிருந்தது.

இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளமையை காணக்கூடியதாக இருந்தமை மேலும் குறிப்பிடதக்கது.

Related Articles

Latest Articles