“தோட்ட மக்களுக்கும் ஏனைய மக்களுக்கு வேலை செய்யக்கூடிய நல்ல அமைச்சு ஒன்று இன்று எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த அமைச்சின் மூலம் எம்மீது நம்பிக்கை வைத்த தோட்ட மக்களுக்கும் அனைத்தின மக்களுக்கும் நல்லதொரு எதிர்காலத்தினை உருவாக்குவேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.
கொழும்பு கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள தோட்ட வீடமைப்பு மற்றும் சமூதாய உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் இன்று (14) கடமையேற்று உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” என் மீது நம்பிக்கை வைத்து எனது தந்தையின் அமைச்சினை எனக்கு வழங்கியதற்காக ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு நன்றிகூற கடமைப்பட்டுள்ளேன். இந்த அமைச்சின் மூலமாக மலையக மக்களுக்கு ஏனைய மக்களுக்கும் சிறந்த ஒரு சேவையினை முன்னெடுப்பேன். இந்த நேரத்தில் எனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.
கடமையேற்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச் செயலாளருமான மருதபாண்டி ரமேஸ்வரன்,தேர்தலில் போட்டியிட்ட இ.தொ.கா வேட்பாளர்கள் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.
கே. சுந்தரலிங்கம், ஹட்டன்