மலையக மக்கள் முன்னணியின் பெயரில் மாற்றமா? செயலாளர் விளக்கம்

மலையக மக்கள் முன்னணியும் அதன் இணை அமைப்புகளின் பெயர் மாற்றம் செய்யப்பட்டு எந்த புதிய அமைப்புகளும் உருவாக்கப்படவில்லை.அதன் அரசியல் தொழிற்சங்க செயற்பாடுகளிளும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம் என மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகமும் பேராசிரியருமான விஜேசந்திரன் தெரிவித்துள்ளார்.

மலையக மக்கள் முன்னணி மற்றும் அதன் இணை அமைப்பான மலையக தொழிலாளர் முன்னணி ஆகியவற்றின் பெயர்களும் செயற்பாடுகளும் மாற்றப்பட்டு தங்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்கமாகவே அல்லது அந்த பெயர்களில் செயற்படுவதாகவும் தங்களுடைய தொழிற்சங்கத்தை பிரபலபடுத்த முயற்சி செய்கின்றார்கள்.

மலையக மக்கள் முன்னணியில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தங்களுடைய அரசியலை கொண்டு செல்வதற்காக பல பிழையான வதந்திகளை பரப்பி வருகின்றார்கள்.
இந்த விடயம் அதிகமாக பதுளை மாவட்டத்திலேயே முன்னெடுக்கப்பட்டு வருவதாக எங்களுடைய தொழிற்சங்க பிரதிநிதிகளும தோட்ட தலைவர்களும் அமைப்பாளர்களும்; அங்கத்தவர்களும் ஆதரவாளர்களும் எங்களுடைய தலைமை காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் இது தொடர்பாக சட்ட நடவடிக்கைகளை தலைமைக் காரியாலயம் ஊடாக மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

குறிப்பாக எங்களுடைய கட்சியையும் தொழிற்சங்கத்தையும் இலக்கு வைத்தே அவர்கள் இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கின்றார்கள்.அதற்கு காரணம் அவர்கள் மலையக மக்கள் முன்னணியின் பெயரை பயன்படுத்தாமல் அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது.

அது அவர்களுடைய அரசியல் வங்குரோத்து நிலைமையையும் தங்களுடைய திறமை இன்மையையுமே காட்டுகின்றது.இந்த அமைப்பில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தங்களுக்கு திறமை இருந்தால் மக்களிடம் செல்வாக்கு இருக்குமாக இருந்தால் அவர்கள் அவர்களுடைய அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளை சுயமாக தாங்களால் உருவாக்கப்பட்ட கட்சியையும் தொழிற்சங்கத்தையும் அதன் பெயரையும் பயன்படுத்தி முன்னெடுக்க வேண்டும்.

எங்களுடைய அமைப்புகளுக்கு பின்னால் ஒழிந்து கொண்டு அரசியல் தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனைவிடுத்து மலையக மக்கள் முன்னணியும் மலையக தொழிலாளர் முன்னணியும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதனுடைய செயற்பாடுகள் முடக்கப்பட்டுவிட்டது அல்லது வேறு பெயர்களில் மலையக தொழிலாளர் முன்னணி செயற்படுகின்றது என்று மக்களிடம் பொய்யான ஏமாற்று விடயங்களை கூறி அவர்களை தங்களுடைய கட்சிக்கும் தொழிற்சங்கத்திற்கும் இணைத்துக் கொள்வதற்கு முயற்சி செய்கின்றார்கள்.

இது போன்ற அரசியல் தொழிற்சங்கவாதிகளை நம்பி மக்கள் இவர்களின் பின்னால் சென்றால் நாளை அவர்களும் நடு வீதியில் நிற்க வேண்டிய நிலையே ஏற்படும்.ஆனால் உண்மையான மலையக தொழிலாளர் முன்னணியின் அங்கத்தவர்கள் யாரும் இவர்களின் பின்னால் செல்ல மாட்டார்கள்.இன்று அதனை உணர்ந்த பலரும் எங்களோடு மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு தயாராகி வருகின்றார்கள்.

இதன் காரணமாகவே எங்களுடைய கட்சியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் திறந்த அழைப்பு ஒன்றை விடுத்தார். கட்சியில் இருந்து வெளியேறியவர்களும் வெளியேற்றப்பட்டவர்களும் தங்களுடைய தவறை உணர்ந்து கட்சியின் விதிமுறைகளை மதித்து செயற்பட முடியுமாக இருந்தால் மீண்டும் கட்சியில் இணைந்து கொள்ளுமாறு திறந்த வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பலரும் தற்பொழுது எங்களுடன் கலந்துரையாடி வருகின்றார்கள்.இது தொடர்பான தீர்மானத்தை கட்சியில் இதற்காக நியமிக்கப்பட்டிருக்கின்ற குழவினர் மேற்கொண்டு வருகின்றார்கள்.

எனவே மலையக மக்கள் முன்னணியையும் மலையக தொழிலாளர் முன்னணியையும் பலவீனப்படுத்தும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றவர்களை எந்த காரணம் கொண்டும் மீண்டும் இணைத்துக் கொள்வதற்கான வாய்ப்புகள் இல்லை. எனவே எங்களோடு தொடர்ந்து இணைந்து செயற்பட விரும்புகின்றவர்கள் இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுப்பதையும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதையும் உடனடியாக தவிர்த்துக்; கொள்வது உகந்தது எனவும் செயலாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles