மலையகத்தில் பாதுகாப்பான காணி பெற அரசாங்க மலையக பிரதிநிதிகளுடன் இணைந்து செயற்பட தயார்

மலைநாட்டில், இந்த பேரவலத்துக்கு பின்னர் எழுந்துள்ள, “பாதுகாப்பான வதிவிட காணி” என்ற உரிமை கோரிக்கையை அரசுடன் உரையாடி பெற அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மலையக பிரதிநிதிகளுடன் கலந்து பேசி இணைந்து செயற்பட தயார்.

நமது மலையக சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம், என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி ஊடக செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது;

“இதற்கு முன் நடைபெற்ற அவலங்களை விட இந்த முறை அவலம் அவதானத்துக்கு உரியது என நான் நம்புகிறேன். ஏறக்குறைய பெரும்பாலான மலை பகுதிகளிலும் மலை பாறைகள், மலை மேடுகள், தரை நிலங்கள் வெடித்து உள்ளன. இடைவெளிகளில் நீர் வெளியேறுகின்றன. இது இயற்கை அனர்த்தம். சிலர் கூறுவதை போன்று இவற்றை கொங்ரீட் போட்டு ஓட்ட முடியாது. இவை இயற்கை நில வெடிப்பு.

மலைநாட்டில், மலை உச்சி, மண் சரிவு அபாயங்களை உடனடியாக எதிர் கொள்ளும் பிரிவினர் இருக்கிறார்கள். இவர்களின் பிரச்சினை, சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப பிரச்சினை. இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் அவசரமாக கோருவோம்.

இது தொடர்பில் ஜனாதிபதி தோழர் அனுரா குமார திசாநாயக்கவுடன் நான் கடந்த வாரம் நேரடியாக நாடாளுமன்றத்தில் உரையாடி உள்ளேன்.

பாதீட்டின் இறுதி நாளன்று, எதிர்கட்சிகளுடன் சேர்ந்து வெளிநடப்பு செய்யாமல், ஜனாதிபதியின் உரையை செவி மடுத்தேன். இனிமேல் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களிலேயே குடியமர்த்த-படுவார்கள் என அவர் சபையில் தன உரையில் கூறியதை நேரடியாக பாராட்டி, அதே அவகாசம் மலையக பெருந்தோட்ட மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.

அதன் பின், நமது எம்பீக்களும், நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இது தொடர்பாக கருத்து கூறி ஜனாதிபதியின் கவனத்துக்கு, காணி பிரச்சினையை மீண்டும் கொண்டு வந்துள்ளார்கள். ஆகவே, இன்று இது தேசிய பிரச்சினையாக மாறு உள்ளதை இனிமேல் எவரும் மறுக்க முடியாது.

பேரவலத்தை அடுத்து, நான் பல இடங்களுக்கு எனது கட்சி குழுவினருடன், நிவாரண பொருள் உதவிகளுடன், கண்காணிப்பு பயணங்கள் மேற்கொண்டேன். நான் போன பல இடங்களில், கண்டி நாவலபிட்டிய கங்க-இஹல-கோரள-அலுகொல்ல மலை உச்சி தோட்டம், மிகவும், ஆபத்து நிறைந்த பூமியாக என் மனதில் நிற்கிறது. அங்கே அனாதரவாக இருந்த மக்களுக்கு, நாம் விநியோகித்த, உடனடி நிவாரணத்தை பெற்று கொண்ட அவர்கள் தம் வாழ்விட பரிதாப நிலையை எனக்கு கூறினார்கள். நான் அந்த மலை உச்சியில் மலையேறி நடக்கும் போதே, என் கால்களுக்கு கீழே, தரை பிளந்து, உள்ளே இருந்து நீர் பீறிட்டு வெளியே வருவதை என் கண்களால் கண்டேன். மீண்டும் ஒரு மழையோ, மண் சரிவோ வருமானால், கீழே உருண்டு வர தயாராக இருக்கும், பாறைகளையும், உயர்ந்த மண்மேடுகளையும், கண்டேன். இதை விட என்ன பரிதாபம் இருக்க முடியும்?

பாதுகாப்பான மாற்று காணிகள் இவர்களுக்கு வழங்க பட வேண்டும். அதுவும் அவசரமாக முன்னுரிமை அடிப்படையில் நடைபெற வேண்டும். ஆகவே, அரசியல் கட்சி, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, பேதங்களுக்கு அப்பால் இந்த விடயத்தில் நாம் ஒன்று பட்டு செயற்பட்டு, நமது சமூகத்தில் மிகவும் விளிம்பு நிலையில் வாழும் பிரிவினரின் பரிதாப சமூக பிரச்சினையை, மனதில் கொண்டு, இவர்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கு பாதுகாப்பான வதிவிட காணிகளை அரசிடம் கோரி பெறுவோம்.

Related Articles

Latest Articles