மலையக மக்களின் 200 வருட நிறைவை முன்னிட்டு இந்தியாவின் தமிழ்நாடு கோயம்புத்தூர் நகரில் இருந்து வருகை தருகின்ற பிரபல தமிழ் மொழி குருக்கள் ராஜேந்திரன் நுவரெலியா சீதையம்மன் ஆலயம் உட்பட மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பூஜை வழிபாடுகளை நடாத்தவுள்ளார்.
நுவரெலியா ஆவேலியா முத்துமாரியம்மன் ஸ்ரீ சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணனின் அழைப்பின் பேரில் வருகை தரவுள்ள தமிழ் மொழி அர்ச்சகர் எதிர்வரும் 23 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தருகின்றார்.இவருடன் கோயம்புத்தூர் ரோட்டறி கழகத்தின் முன்னாள் தலைவரும் ரோட்டறி வலய பணிப்பாளருமான (மாவட்டம் ) தண்டபானி ஜெயகாந்தனும் வருகை தருகின்றார்.
மலையக மக்கள் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து எதிர்வரும் 2023 ஆண்டுடன் 200 வருடங்களை பூர்த்தியாவதை முன்னிட்டும் இலங்கையில் தற்பொழுது ஏற்பட்;டுள்ள பொருளாதார பின்னடைவில் இருந்து நாடு சுபீட்சம் பெறவும் மலையக மக்களுக்கும் இலங்கையின் ஏனைய சமூகங்களுக்கு ஆசி வேண்டியும் இந்த விசேட பூஜை வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
இலங்கைக்கு வருகை தருகின்ற தமிழ் குருக்கள் ராஜேந்திரன் தமிழ் மொழி மூலமாக பூஜைகளை முன்னெடுப்பதில் மிகவும் பிரபல்யமான ஒருவர்.அவர் இதுவரையில் பல திருமணங்களையும் பல ஆலய கும்பாபிஷேகங்களையும் சினிமா நட்சத்திரங்கள் பலரின் திருமண நிகழ்வுகளையும் தமிழ் மொழியில் முன்னெடுத்துள்ளார்.அத்துடன் இவரிடம் கற்றுக் கொண்ட பலர் இன்று மலேசியா சிந்கப்பூர் பிரான்ஸ் ஆஸ்திரேலியா கணடா உட்பட பல நாடுகளில் தமிழில் ஆலய பூஜைகள் உட்பட பல செயற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றனர்.
24 ஆம் திகதி கொழும்பு வெள்ளவத்தையில் அமைந்துள்ள கங்காதீஸ்வரர் யாக பீடத்தில் பீடத்தின் ஸ்தாபகரும் பிரபல மனவள ஆலோசகருமான சாமி கங்காதரன் தலைமையில் விசேட பூஜை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.காலை 12 மணியளவில் இந்த பூஜை நடைபெறவுள்ளது.
25 ஆம் திகதி காலை 11.30 மணிக்கு சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் ஆலயத்தின் தலைவர் மற்றும் நிர்வாக சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.பக்தர்கள் கலந்து கொண்டு ஆசி பெற்றுக் கொள்ளலாம்.
25 ஆம் திகதி மாலை 3.00 மணியளவில் தலவாக்கலை முருகன் ஆலயத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது.அகில இலங்கை ஜக்கிய குருமார் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் தற்புரச சிவாச்சாரியார் ஸ்கந்தராஜா குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இதற்கான எற்பாடுகளை தலவாக்கலை ஆலயத்தின் பிரதம குருக்கள் மேற்கொண்டு வருகின்றார்.
இவை தவிர இன்னும் சில ஆலயங்களில் பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.எதிர்வரும் 29 ஆம் திகதி இவர்கள் இந்தியாவிற்கு பயணமாகவுள்ளனர்.










