கல்வி உட்பட எல்லா துறைகளிலும் மலையகம் இன்று பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது. எமது சமூகத்தை அடுத்தக்கட்டம் நோக்கி கொண்டுசெல்வதற்கு அமைச்சர் ஜீவன் தொண்டமான் சிறப்பான திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.” – என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கல்வியில் மலையக சமூகமும் இன்று வேகமாக வளர்ச்சியடைந்துவருகின்றது என்பதையே அண்மைக்கால பெறுபேறுகள் எடுத்துக்காட்டுகின்றனர். அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் மாணவர்கள் என கல்வி சமூகத்தினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.
அதேபோல மலையகம் இன்று படிப்படியாக முன்னேறி எல்லா துறைகளிலும் பிரகாசித்துக்கொண்டிருக்கின்றது. பல்கலைக்கழக பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்வியற் கல்லூரியில் ஆசிரியர்கள், சட்டத்துறை, வைத்தியம் என எல்லா துறைகளிலும் எம்மவர்கள் உள்ளனர். நிர்வாக சேவையிலும் உயர் பதவிகளில் உள்ளனர்.
இந்த நாட்டை ஆட்சிசெய்த அரசுகளுடன் பேச்சு நடத்திய மலையக கல்வி துறைக்கு தேவையான உதவிகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பெற்றுக்கொடுத்துள்ளது. மறைந்த பெருந்தலைவர் செளமியமூர்த்தி தொண்டமான் அன்று தனிமனிதனாக போராடி, கல்வி உரிமைகளை பெற்றெடுத்தார். மறைந்த தலைவர் ஆறுமுகன் தொண்டமான் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஆசிரியர் நியமனங்களைப் பெற்றுக்கொடுத்தார். அதேபோல பாடசாலைக்கு தேவையான பௌதீக வளங்களும் பெற்றுக்கொடுக்கப்பட்டன.
எமது அமைச்சர் ஜீவன் தொண்டமான், நவீன யுகத்துக்கேற்ப மலையக கல்வியில் மறுசீரமைப்பை ஏற்படுத்த முயற்சிக்கின்றார். கல்வி அமைச்சருடன் பேச்சு நடத்திய 2 ஆயிரத்து மேற்பட்ட உதவி ஆசிரியர்கள் நியமனத்தை பெற்றுக்கொடுக்கவுள்ளார். அதற்கான யோசனை அமைச்சரவைக்கும் சென்றுள்ளது.
இந்தியா வழங்கியுள்ள 3 ஆயிரம் மில்லியன் ரூபாவும் மலையக கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படும். அதற்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டுவருகின்றன.” – என்றார்.