மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் இருந்து சாமிமலை , காட்மோர் போன்ற பகுதிகளுக்கு சேவையில் ஈடுபடும் தனியார் பஸ்கள், பயணிகளிடமிருந்து அதிக கட்டணத்தை அறிவிடுவதாக மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இது தொடர்பில் பயணிகள் கேள்வி எழுப்பினால், பஸ் நடத்துனர்கள் அவர்கள்மீது சீற்றம் கொள்வதாகவும், இடைநடுவிலேயே இறக்கி விட்டுச்செல்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து சேவையும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுமார் 45 நிமிடங்கள்வரை பஸ் தரிப்படத்தில் காத்திருக்க வேண்டிய பஸ்கள் 4 மணி நேரம்வரை காத்திருப்பதாகவும், அதிகளவு பயணிகளை ஏற்றிச்செல்வதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
எரிபொருள் விலை 20 ரூபாவால் அண்மையில் குறைக்கப்பட்ட நிலையில் பஸ் கட்டணமும் 2 வீதத்தால் குறைக்கப்பட்டது. எனினும், மேற்படி பகுதிகளில் கட்டண குறைப்பு இடம்பெறவில்லை.
(ஞானராஜ்)
