இறக்குவானை, மாதம்பை தோட்டத்தில் கோயில் அமைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின்போது ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும் முறுகல் நிலைமைக்கும் உரிய தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடாத்தி, அதற்கான தீர்வினை செந்தில் தொண்டமான் இன்று பெற்றுக்கொடுத்துள்ளார்.
அதன் அடிப்படையில் செந்தில் தொண்டமானின் தலையீட்டுக்கு அமைய, புதிய இடத்தில் கோயில் அமைப்பதற்கான அனுமதியை தோட்ட நிர்வாகம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை இனத்தவர்களுடனான முரண்பாடு தவிர்க்கப்பட்டுள்ளது.
எனினும் நிர்வாகத்தின் அனுமதியின்றி பலாத்காரமாக கையகப்படுத்திய முந்தைய இடத்திலேயே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என தோட்ட மக்களால் தெரிவிக்கப்படுமானால் அது தொடர்பில் சட்ட ரீதியான சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும். அத்துடன் அது இன முறுகல் ஏற்படுவதற்கான வாய்ப்பாக அமையும்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மாதம்பை தோட்டத்தில், தோட்ட நிர்வாகத்தினரின் அனுமதி இன்றியும் பதிவு செய்யப்படாமலும் பலாத்காரமாக சிலையொன்று ஸ்தாபிக்கப்பட்டதையடுத்து பெரும்பான்மை இனத்தவர்களால் அதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் இரு தரப்பினருக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டது.
இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், சம்பவ இடத்துக்கு விரைந்து ஆராய்ந்துள்ளார். இந்த நிலையில் இவ்விடயத்தில் செந்தில் தொண்டமான் தலையிட்டு தீர்வினை பெற்றுக்கொடுத்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பின்னர் இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொலைபேசி ஊடாகக் கலந்துரையாடிய செந்தில் தொண்டமான், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பணிப்புரை வழங்கியுள்ளார்.
அத்துடன் மாதம்பை தோட்டத்தை நிர்வகிக்கும் பெருந்தோட்ட கம்பனியின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். நிர்வாகத்தின் எந்தவித அனுமதியும் இன்றி தோட்ட மக்களால் சிலையொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளதுடன் இது தொடர்பில் எந்தவிதமான கோரிக்கைகளும் எழுத்துமூலமாக வழங்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் சிலை ஸ்தாபிப்பதற்கு அவர்கள் தெரிவு செய்த இடமானது, பெரும்பான்மை இனத்தவர்களின் வழிபாட்டு இடத்துக்கு அருகில் இருப்பதாகவும் அந்த இடம் ஏற்கனவே பெரும்பான்மை இனத்தவர்களால் வழிபாட்டுக்கென கோரப்பட்டு வந்துள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந்த நிலையில் அங்கு கோயில் அமைக்க அனுமதிப்பதானது இரு தரப்பினருக்கும் இடையே முறுகல் நிலையை மேலும் அதிகரிக்கும் எனவும் நிர்வாகத்தினர் செந்தில் தொண்டமானிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய தோட்ட மக்களிடமும் செந்தில் தொண்டமான் தொடர்பு கொண்டுள்ளார். பாரம்பரிய இடம் தவிர புதிதாக ஓர் இடத்தில் கோயில் அமைப்பதற்கான அனுமதியை நிர்வாகத்தினரிடமிருந்து பெற்றுக்கொண்டிருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். அந்த நிலையமையில் இவ்வாறான முறுகல் நிலையை தவிர்த்துக்கொண்டிருக்க முடியும்.
அவ்வாறு நிர்வாகம் மறுக்கும் பட்சத்தில், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கமாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொருத்தமான இடத்தைப் பெற்றுக்கொடுத்திருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் ஆராயும் கூட்டம் கொடகவலை பிரதேச செயலகத்தில், பிரதேச செயலாளரின் தலைமையில் இன்று இடம்பெற்றது. இந்தக் கூட்டத்தில் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முதித்தா சொய்சா, பிரதேச சபை தலைவர், உறுப்பினர்கள், இறக்குவானை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப செயலாளர் ரூபன் பெருமாள், பௌத்த பிக்குகள், ஆலய பரிபால சபையினர், இளைஞர்கள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இந்தக் கூட்டத்தின்போது ஆலய விவகாரம் தொடர்பில் பெரும்பான்மை இனத்தவர்களால் கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் பொருட்டு, செந்தில் தொண்டமான் தோட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் அடிப்படையில் கோயில் அமைப்பதற்கான புதிய இடத்தை 24 மணி நேரத்துக்குள் வழங்குவதற்கு தோட்ட நிர்வாகம் உத்தியோகபூர்வமாக சம்மதித்துள்ளது.
எனினும் நிர்வாகத்தின் அனுமதியின்றி பலாத்காரமாக கையகப்படுத்திய முந்தைய இடத்திலேயே ஆலயம் அமைக்கப்பட வேண்டும் என தோட்ட மக்களால் தெரிவிக்கப்படுமானால் அது தொடர்பில் சட்ட ரீதியான சிக்கல்களை மக்கள் எதிர்நோக்கக் கூடிய சூழ்நிலை ஏற்படும்.
செந்தில் தொண்டமானின் தோட்ட நிர்வாகத்துடன் கலந்துரையாடியதற்கு அமைய, கிடைக்கப்பெற்ற இந்தத் தீர்வானது இரத்தினபுரி மாவட்ட மக்களுக்கு காலத்துக்கும் சூழ்நிலைக்கும் ஏற்புடையதாகும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.