யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ இன்று தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மண்டைதீவில் அமையவுள்ள இந்த மைதானத்துக்கான கட்டுமானப் பணிகளை, முறையான சுற்றுச்சூழல் அனுமதிச் செயல்முறைகள் பூர்த்தியாகும் வரை தற்காலிகமாக நிறுத்துமாறு மத்திய சுற்றாடல் அதிகார சபை அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்:-
“யாழ்ப்பாணத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானக் கட்டுமானப் பணியானது நிச்சயம் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. ஒரு பாரிய திட்டத்தை முழுமைப்படுத்த வேண்டுமெனில், அதற்குத் தேவையான சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப அறிக்கைகள் அவசியமானவை.
எனவே, சம்பந்தப்பட்ட சகல அமைச்சுகளுடனும் இணைந்து ஒரு கூட்டு முயற்சியாக இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மைதானம் அமைக்கும் வேலைத்திட்டத்தை எவ்விதத் தடையுமின்றி விரைவில் முடிக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.” – என்றார்.










