ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தனது நிலைப்பாட்டை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்த பின்னரே மொட்டு கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று அக்கட்சியின் சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அவர் அந்த நிலைப்பாட்டை அறிவித்த பின்னரே எமது கட்சியின் தீர்மானம் எடுக்கப்பட்டு, அது கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்சவால் அறிவிக்கப்படும்.
அதேவேளை, தேர்தலை முன்கூட்டி நடத்தியே எமது கட்சிக்கு பழக்கம். எனவே, தேர்தல்களை ஒத்திவைக்கும் முயற்சிக்கு அதுரவு வழங்கப்படமாட்டாது, எத்தகைய யோசனைகள் வந்தாலும் உரிய நேரத்தில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற எமது கட்சியின் நிலைப்பாடு மாறாது.” – என்றார்.
