ராகலையில் தீ விபத்து – 20 லயன் அறைகள் சேதம்! சொத்துகள் தீக்கிரை!!

நுவரெலியா, ராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராகலை கீழ்பிரிவு தோட்டத்தில் நெடுங்குடியிருப்பில் இன்று (05.07.2023) முற்பகல் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இத் தீ விபத்தால் 20 குடும்பங்களைச் சேர்ந்த 75 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.குறித்த தோட்டத்தில் ஆறாம் இலக்க நெருங்குடியிருப்பிலேயே இவ்வாறு தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பிரதேசவாசிகள் இணைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அத்துடன், இது பற்றி தீயணைப்பு பிரிவு, பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டது.

இத்தீவிபத்தால் எவருக்கும் காயமோ அல்லது உயிர்சேதமோ ஏற்படவில்லை. எனினும், பெருமளவில் பொருள் சேதம் ஏற்பட்டுள்ளது.

வீட்டு உபகரணங்கள், முக்கிய ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன என்று மக்கள் தெரிவித்தனர். ஒரு சில பொருட்கள் மாத்திரமே மக்களால் பாதுகாக்ககூடியதாக இருந்தது.

பாதிக்கப்பட்டவர்களை தோட்ட வைத்தியசாலையில் தங்கவைப்பதற்கான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அனர்த்த முகாமைத்துவ நிலையம், நுவரெலியா பிரதேச சபை ஆகியன ஊடாகவும் வழங்க நடவடிக்ககைள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் இராகலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

நுவரெலியா, நானுஓயா, ராகலை நிருபர்கள்

Related Articles

Latest Articles