7-வது 20 ஓவர் உலக கோப்பை போட்டி வருகிற செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டு இருக்கிறது. ஆனால் கொரோனா பாதிப்பு காரணமாக இப்போட்டித் தொடரை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு மாற்ற ஆலோசிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வெல்லும் அணி எது? என்பது குறித்து முன்னாள் வீரர்கள் பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான வாசிம் அக்ரம் 20 ஓவர் உலக கோப்பையை வெல்ல 4 அணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுறித்து அவர் கூறியதாவது:-
20 ஓவர் உலக கோப்பையை வெல்ல இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. அவர்கள் 20 ஓவர் கிரிக்கெட்டை பயமின்றி விளையாடும் அணுகு முறையை கொண்டுள்ளனர். இங்கிலாந்து அணியும் கோப்பையை வெல்வதில் முன்னணியில் உள்ளது.அதேபோல் நியூசிலாந்து அணிக்கும் வாய்ப்பு இருக்கிறது.
பாகிஸ்தான் அணி சரியான கலவையை செய்வதற்கு இன்னும் உழைக்க வேண்டும். ஒரு பாகிஸ்தான் வீரராக உலக கோப்பையை எங்கள் அணி வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அப்படி வென்றால் எங்களது கனவுகள் நனவாகும். அவர்கள் சரியான வீரர்கள் கலவையை தேர்வு செய்து விட்டால் சிறந்த அணியை பெற்று கடுமையாக போராட முடியும். பாகிஸ்தான் அணியில் 5 மற்றும் 6-வது வரிசையில் உள்ள பிரச்சினையை தீர்க்க வேண்டும். இவைகளை செய்தால் பாகிஸ்தானுக்கு வலுவான வாய்ப்புகள் இருக்கும்.
வெஸ்ட் இண்டீஸ் அணியை பற்றி கணிக்க முடியாது. அவர்களது முன்னணி வீரர்கள் அப்போட்டித்தொடரில் விளையாடினால் அந்த அணி மற்றவர்களுக்கு அச்சுறுத்தலாக விளங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.