தோட்டத் தொழிலாளர்களின் வேலை சுமையை அதிகரிக்காமல் மேலதிகமாக 350 ரூபாவுக்கு எவ்வித நிபந்தனை விதிக்காமல் சம்பள அதிகரிப்பு வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்தால் அதை நாம் வரவேற்கிறோம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளவை வருமாறு,
கடந்த சம்பள உயர்வு பேச்சுவார்த்தையின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முன்மொழிவு 1700 ரூபாய் அடிப்படை சம்பளமாகும்.
எனினும் தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில் 2000 ரூபாவுக்கு குறையாத சம்பளத்தை அரசு பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டும்.
தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு முன் 2000 ரூபாவுக்கு குறைந்த சம்பளத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தெரிவித்திருந்தது. அத்துடன் சம்பள நிர்ணய சபையில் எமது 1700 ரூபா கோரிக்கையை நிராகரித்தவர்கள் இன்று நாம் கோரிய 1700 ரூபாவிற்கே வந்து நிற்கின்றார்.
எனினும் தற்போதைய நிலையில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தால் அது அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடக்கூடும். எனவே அரசாங்கம் முன் வைத்திருக்கின்ற தொகையை வழங்குவதற்கு பெருந்தோட்ட கம்பனிகள் எவ்வித நிபந்தனைகளும் விதிக்காமல் உடன்பாட்டுக்கு வர வேண்டும்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழிற்சங்கங்கள் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தால் அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பெருந்தோட்ட கம்பனிகள் இழுத்தடிப்புகளை செய்து வந்திருக்கின்றன. இது எமது கடந்த கால அனுபவங்களாகும்.
அரசாங்கம் எமது ஒத்துழைப்பை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உற்பத்தி அடிப்படையாகக் கொண்டு சம்பள அதிகரிப்பு என்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. தோட்டத் தொழிலாளர்களின் வேலைப்பளு வேலை நேரம் அதிகரிக்கப்படக்கூடாது. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைச் செலவை அடிப்படையாகக் கொண்ட சம்பள அதிகரிப்பையே நாம் கோரி நிற்கிறோம்.
தோட்ட தொழிலாளர்களுக்கு
1700 ரூபாய் சம்பளத்தை கொடுப்பதற்கு தோட்ட கம்பனிகள் இணக்கம் தெரிவித்திருப்பதாக அமைச்சர் சமரசிங்க தெரிவித்துள்ளார். எனினும் அது எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரிவிக்கப்படவில்லை. இது சம்பந்தமான தெளிவை தொழிற்சங்கங்களுக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் தெரிவிக்க வேண்டும். எனவும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பிரதி தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்
