மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை லயன்களிலேயே முடக்காமல் அவர்களை சிறுதோட்ட உரிமையாளர்களாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்க்கட்சி தலைவர் இன்று உறுதியளித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ பெருந்தோட்டப் பகுதிகளில் வசித்து வரும் மக்கள் லயன் அறைகளோடு தொழிலாளர்களாக தமது வாழ்க்கையை நடத்தி வருகின்றனர்.
தேர்தல் காலம் நெருங்கும் போது இவர்களது ஊதியத்தை 1000, 1500, 1700, 2000, 2500 ரூபாவாக அதிகரித்து தருவோம் என பலரும் வாக்குறுதி வழங்கி வருகின்றனர். இந்த விடயத்தை புதிதாக நோக்கி தீர்மானங்களுக்கு வர வேண்டும்.
நமது நாட்டின் அரச மற்றும் தனியார் பொருந்தோட்டத் துறையில் செய்கை மேற்கொள்ளப்படாத பெரும் நிலப்பரப்பு காணப்படுகிறது. இவை செய்கை மேற்கொள்ளப்படாது தரிசு நிலங்களாக காணப்பட்டு வருகின்றன.
எமது நாட்டின் தேயிலை உற்பத்திக்கு 60-70 வீத பங்களிப்புகளை சிறு தேயிலை தோட்ட உரிமையாளர்களாலயே வழங்கப்படுகின்றன. இவர்களிடம் 40 வீதத்துக்கும் குறைந்த அளவு நிலமே இருந்து வருகிறது.
60 வீதத்துக்கும் அதிகமான நில உரிமையுடன் கூடிய பெரிய அளவிலான பொருந்தோட்ட நிறுவனம் தேசிய உற்பத்திக்கு 30 சதவீத பங்களிப்பையே வழங்கி வருகின்றது.
தோட்டங்களில் பணிபுரியும் மக்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பளத்தை அதிகரித்து தருவதாக ஏமாற்றி, பொய்யான கதைகளை கூறாமல், அவர்களை லயன் அறைகளிலயே காலம் பூராகவும் அடைத்து வைக்காது, இந்த தொழிலாளிகளை சிறு தோட்ட உரிமையாளராக மாற்றுவோம்.
செய்கைகள் மேற்கொள்ளப்படாத தரிசு நிலங்களை, வேலையில்லா அப்பகுதி மக்களுக்கும், இடமற்ற தோட்ட மக்களுக்கும், அப்பகுதி இளைஞர்களுக்கும் வழங்குவோம். சாதி, மதம், கட்சி, நிற பாகுபாடு இங்கு கிடையாது.
எப்பொழுதும் கூலித் தொழிலில் ஈடுபட்டுவரும் மக்கள் சிறிய தேயிலைத் தோட்டத்திற்குச் சொந்தக்காரராகி, சொந்த வீடு கட்டி, தமது சொந்த தோட்டத்திலயே செய்கைகளில் ஈடுபடும் காலத்தை கிட்டிய எதிர்காலத்தில் உருவாக்கித் தருவோம். இதனால் தேயிலை உற்பத்திக்கான பங்களிப்பு அதிகரிக்கும்.
செய்கை மேற்கொள்ளப்படாத பெருந்தோட்டங்களை, அதைச் சுற்றியிருக்கும் தொழிலாளர்களுக்கே கொடுத்து, சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாகவும், சொந்தமாக வீடு வைத்திருப்பவராகவும் மாற்றியமைப்போம். சிறு தேயிலைத் தோட்டத் துறையை விரிவுபடுத்துவோம். தேயிலை உற்பத்தித் திறனை மேம்படுத்துவோம். நிலத்துக்கான உரிமையை பெற்றுத் தருவோம்.’’ – என்றார்.










