‘லொக்டவுன்’ செய்யப்பட்டுள்ள நிவ்போரஸ்ட் தோட்ட மக்களுக்கு இன்னும் நிவாரணம் இல்லை’

“புபுரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மணிக்கட்டி, நீவ்போரஸ்ட் பிரிவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும், சுகாதார வசதிகளும் ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என பெருந்தோட்டத்துறை அமைச்சர் அரசாங்கத்தின் சார்பில் பாராளுமன்றத்தில் உறுதியளித்தார். அந்த உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.” – என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலையில் பணியாற்றிய நிலையில் நிவ்போரஸ்ட் தோட்டத்துக்கு வந்த பெண்ணொருவருக்கு கொரோனா தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் அத்தோட்டம் முடக்கப்பட்டுள்ளது. சுமார் 190 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இவர்களுக்கு தேவையான வாழ்வாதார மற்றும் சுகாதார ஏற்பாடுகளை செய்துகொடுக்குமாறு பாராளுமன்றத்தில் வைத்து அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தேன். முதல் நாள் ஆளுங்கட்சி பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், மறுநாள் பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவும் உறுதிமொழி வழங்கினர். தேவையான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும் எனவும் கூறினர். ஆனால் அம்மக்களுக்கு தேவையான ஏற்பாடுகள் இன்னும் செய்துகொடுக்கப்படவில்லை. இது கண்டிக்கதக்க விடயமாகும். உடனடியாக அரசாங்கம் செயற்படவேண்டும் என வலியுறுத்துகின்றேன்.” – என்றார்.

Related Articles

Latest Articles