நாடு வங்குரோத்து நிலை அடைந்தமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இருந்து பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் விலகியுள்ளது.
மேற்படி நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் தலைமைப்பதவிக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அக்கட்சி இந்த முடிவை எடுத்துள்ளது.
அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் இக்குழுவில் இருந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசினால் பிரகடனப்படுத்தப்பட்ட நிதி வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்ந்து நாடாளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கும், அது தொடர்பில் தமது முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்குமான நாடாளுமன்ற விசேட குழுவுக்கான உறுப்பினர்கள் அண்மையில் பெயரிடப்பட்டனர்.
சாகர காரியவசம் அவர்களின் தலைமையிலான இக்குழுவுக்கு, பவித்ராதேவி வன்னிஆரச்சி, டி.வீ. சானக, விஜித ஹேரத், மஹிந்தானந்த அலுத்கமகே, இரான் விக்கிரமரத்ன, அஸோக அபேசிங்ஹ, ஜயந்த கெட்டகொட, ஹர்ஷண ராஜகருண, (கலாநிதி) மேஜர் பிரதீப் உந்துகொட, சஞ்ஜீவ எதிரிமான்ன, நாலக பண்டார கோட்டேகொட, சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் , (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.
குழுவின் தலைமைப்பதவி ஆளுங்கட்சி வசம் இருப்பதால் இதன் நோக்கம் தெளிவாகின்றது எனக்கூறி ஆரம்பம் முதலே அதனை எதிரணிகள் எதிர்த்தன.
இந்நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தி வெளியேறும் என்று எதிர்க்கட்சி தலைவர் நேற்று அறிவித்தார்.
அத்துடன், இவ்விவகாரம் தொடர்பில் எதிரணிகள் ஒருமித்த நிலைப்பாட்டுக்கு வர வேண்டும் எனவும், தனது தலைமையில் குழுவொன்றை அமைத்து இவ்விவகாரம் தொடர்பில் ஆராயலாம் எனவும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அறிவித்தார்.
