வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கு பேச்சு ஊடாக தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதை உள்ளுராட்சி சபைத் தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளன என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு,
“ வடக்கில் காணிகளைக் கைப்படுத்துவதற்கு அரசாங்கம் முற்பட்டது. இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலும் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இவ்வாறு எதிர்ப்புகள் வலுத்ததால் பிரதமல் தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதனால் ஏற்படும் அநீதிகளை நாம் சுட்டிக்காட்டினோம்.
அதனை ஏற்றுக்கொண்டு வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் மீளப்பெற்றுள்ளது. இது வரவேற்கக்கூடிய விடயம்.
ஜனாதிபதி தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களின்போது வடக்கு, கிழக்கில் கிடைக்கப்பெற்ற வாக்குகளைவிடவும் உள்ளுராட்சிசபைத் தேர்தலில் அரசாங்கம் பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. பிரச்சினைகளுக்கு கலந்துரையாடல்மூலம் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதையே தேர்தல் முடிவுகள் அரசாங்கத்துக்கு உணர்த்தியுள்ளன.” – என்றார்.