பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கொடுமையை இன்றளவிலும் தமிழ் மக்கள் அனுபவித்து வருகின்றனர். இன்று அச்சட்டம் ஜனநாயகத்திற்காகக் குரல் கொடுக்கும் நாட்டின் இதர பகுதியினரையும் விட்டுவைக்கவில்லை. எனவே நாட்டை முன்னேற்ற விரும்பினால் கடந்த கால தவறுகளை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டு அதை நிவர்த்தி செய்ய தென்னிலங்கை அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.”
இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,
” ஏறத்தாழ நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னர் தற்காலிக ஏற்பாடாக அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவினால் பயங்கரவாதத் தடைசட்டம் கொண்டுவரப்பட்டது. தற்காலிகம் என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சட்டம் இன்றுவரை நீடித்திருக்கின்றது. இந்த சட்டமானது எவரையும் தாம் விரும்பியவாறு கைது செய்வதற்கும், நீதிமன்றத்திற்குப் பாரப்படுத்தாமல், இராணுவ, பொலிஸ் முகாம்களில் அவர்களைத் தடுத்து வைத்து சித்திரவதை செய்து இராணுவம், பொலிஸார் விரும்புகின்ற வகையில் வாக்குமூலம் பெறுவதற்கும் வழிவகுக்கின்றது.
மனித உரிமை அமைப்புகளும், சர்வதேச மனித உரிமை நிறுவனங்களும், ஐரோப்பிய ஒன்றியமும் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான சட்டம் என்றும் இது உடனடியாக நீக்கப்படவேண்டும் என்றும் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றன.
இந்தக் காட்டுமிராண்டிச் சட்டத்தின்கீழ் கடந்த காலத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள் யுவதிகள் கைதுசெய்யப்பட்டு பல சித்திரவதைகளையும் கொடுமைகளையும் அனுபவித்து வந்திருக்கின்றனர். ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகம் கடந்த காலத்தில் இலங்கை தொடர்பாக கொண்டுவந்த தீர்மானத்திலும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தையும் நிறைவேற்றியிருந்தது.
ஆனால், அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள், நிர்வாகக் குளறுபடிகள், அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருள் பற்றாக்குறை போன்றவற்றுக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து போராடி ராஜபக்ச குடும்பத்தினரை வீட்டிற்கு அனுப்பினார்கள். அந்த ஜனநாயகபூர்வமான போராட்டத்தை வன்முறை கொண்டு அடக்க முற்பட்டபொழுது, அதற்கெதிராக மக்கள் கொதித்தெழுந்து வன்முறையாளர்களுக்கும் பாடம் புகட்டினர்.
தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக வந்து, மஹிந்த ராஜபக்ச பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததால், ஜனாதிபதியால் பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க , மக்கள் எழுச்சியால் விரட்டியடிக்கப்பட்ட கோட்டபாய ராஜபக்சவின் இடத்திற்கு இப்பொழுது ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவ்வாறு ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவர், அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட பலபேரை பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்கின்ற ஒரு நடவடிக்கையும் நடந்துவருகின்றது.
மாணவர் அமைப்புகளின் தலைவர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள், பொதுமக்கள் என பலர் இந்த பயங்கரவாதத் தடைச்சட்டத்தி;கீழ் கைதுசெய்யப்படுகிறார்கள். அதற்கான ஒப்புதலையும் உத்தரவுகளையும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கியிருக்கின்றார்.தமிழ் மக்களுக்கு எதிராக இந்த காட்டுமிராண்டிச் சட்டம் ஏவிவிடப்பட்டபொழுது, சிங்கள அரசியல் தலைவர்களோ, பொது அமைப்புகளோ, தொழிற்சங்கங்களோ யாருமே அதற்கு எதிராகக் குரல் கொடுக்கவில்லை. ஆனால் இந்தக் கொடிய சட்டத்தின்கீழ் நாட்டின் ஜனநாயகத்திற்காகவும் ஊழலை எதிர்த்தும் போராடுகின்ற மக்களை கைதுசெய்கின்றபொழுது குறைந்தபட்சம் இந்த சட்டத்திற்கெதிரான குரல் தென்பகுதியில் எழுந்திருப்பது வரவேற்கத்தக்கது.
எம்மைப்பொறுத்தவரையில் அன்றும் சரி இன்றும்சரி இந்தக் காட்டுமிராண்டித்தனமான சட்டம் அகற்றப்படவேண்டுமென்பதில் தமிழ் மக்களாகிய நாம் உறுதியாக இருக்கின்றோம்.ஆனால் இங்கு நகைப்புக்குரிய விடயம் என்னவெனில் முன்னாள் வெளிவிவகார அமைச்சரான பேராசிரியர் பீரிஸ், பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத்தொடர் தொடங்கவிருக்கின்ற இந்தக் காலக்கட்டத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பிரயோகிப்பது பிழை என்றும் உலக நாடுகள் அதனை ஏற்றுக்கொள்ளாது என்றும் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் இலங்கைக்கு எதிராக காட்டமான தீர்மானத்தை நிறைவேற்ற அது வழிவகுக்கும் என்றும் ஆகவே பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இப்பொழுது பாவிக்கக்கூடாது என்றும் கூறியிருக்கின்றார்.
அவரைப் பொறுத்தவரையில் சர்வதேச அழுத்தங்களிலிருந்து தற்காலிகமாகவேணும் தப்புவதற்கு ஆலோசனைகளை முன்வைக்கின்றாரே தவிர, பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முழுமையாக நீக்கும்படி அவர் கூறவில்லை.
ஜனநாயகத்தின்மீதும் மனித உரிமைகள்மீதும் அக்கறை கொண்டவர்களும், அமைதி, சமாதானத்தை விரும்பக்கூடிய எவரும் இத்தகைய காட்டுமிராண்த்தனமான சட்டத்தை ஏற்க மாட்டார்கள். ஜனநாயகப் போராட்டங்களுக்கு எதிராக இந்தச் சட்டம் பாய்கின்ற இத்தருணத்திலாவது சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மனித உரிமை ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள், மற்றும் தொழிற்சங்கத்தினரும் இத்தகைய சட்டங்களுக்கு எதிராகக் குரல்கொடுக்க வேண்டும் என்று கோருகின்றோம். தேசியப் பாதுகாப்பு என்ற பெயரில் ஊழல் மலிந்த அரசுகளைக் காப்பாற்றிக்கொள்வதற்காக இவ்வாறான சட்டங்கள் என்ன வடிவத்தில் என்ன பெயரில் வந்தாலும் அவை முற்றுமுழுதாக நிராகரிக்கப்படவேண்டும் என்றும் இத்தருணத்தில் கேட்டுக்கொள்ள விரும்புகின்றோம்.” – என்றுள்ளது.
