இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களாகிய மலையக மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளை சரியாக இனம் காணாமல் தீர்வை முன்வைக்குமாறு கோருவது அர்த்தமற்ற அணுகுமுறையாகும் என முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதி தலைவருமான கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் 75 ஆவது சுதந்திர தினத்துக்கு முன்பாக இலங்கையின் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன் வடகிழக்கு மட்டுமல்லாமல் மலையக மக்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வை முன்வைக்கப் போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வரவேற்கப்படக் கூடியது எனினும் மலையக மக்கள் எதிர் நோக்குகின்ற அடிப்படை அரசியல் பிரச்சினைகளை தெளிவாகத் தெரிந்து கொள்ளாமல் தீர்வை முன் வைப்பது நடைமுறைக்கு பொருத்தமற்றதாகும். அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரசின் உயர் மட்ட குழுவை சந்தித்து கலந்துரையாடியபோது மலையக மக்களின் பிரச்சினைகளை ஆராய்ந்து அவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்து கொள்வதற்காக குழு ஒன்றை நியமிக்க போவதாக அறிவித்திருந்தார். ஆனால் அந்தக் குழு இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்த நிலையில் சில அரசியல் கட்சியின் தலைவர்கள் பிரச்சினைகளை ஆராய்ந்து கொண்டிருக்காமல் மலையக மக்களுக்கான தீர்வை முன் வையுங்கள் என்று கூறுகிறார்கள்.
மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அரசியல் கட்சித் தலைவர்களுக்கே அடிமட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் தெளிவான பார்வை காணப்படவில்லை. ஒரு சில தொண்டு நிறுவனங்களின் அறிக்கைகளை வைத்துக்கொண்டு அதுதான் மலையகத்தின் பிரச்சினை என்று கூறுவது ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒன்றல்ல.
எமது கோரிக்கைகள் ஒரு மூடிய அறையில் ஒரு வரையறுக்கப்பட்ட குழுவினரால் மட்டும் தயாரிக்கப்படுகின்ற அறிக்கையாக மட்டுமல்லாமல் அதில் மலையகத்தின் பல்வேறு தரப்பினரின் நடைமுறை பிரச்சினைகள் உள்வாங்கப்பட்ட முழுமையான கோரிக்கையாக அமைவது அவசியமானதாகும்










