” அதிகாரப்பகிர்வு தொடர்பில் கலந்துரையாடுவதற்கு இது ஏற்புடைய தருணம் அல்ல. எனவே, 13 ஆவது திருத்தச்சட்டம் உட்பட அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சுகளை கைவிடவும்.”
இவ்வாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது, ஆளுந்தரப்பின் பிரதான பங்காளிக்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
” நாடு பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்துள்ளது, வங்குரோத்து நிலையில் இருந்து நாடு இன்னும் மீளவில்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில் 13 பற்றி கதைப்பது ஏற்புடைய விடயம் அல்ல. ஏனெனில் நாடு வீழ்ந்திருக்கும்வேளைதான்
ஸ்தீரமற்ற நிலையை உருவாக்குவதற்கு சில தரப்புகள், அமைப்புகள் முற்படக்கூடும்.
அதிகாரப்பகிர்வு தொடர்பான பேச்சை எவரும் கோரவில்லை. ஜனாதிபதியால்தான் பேச்சு ஆரம்பிக்கப்பட்டது. எனவே, இது தற்போது அவசியமில்லை. எனவே, அதிகாரப்பகிர்வு தொடர்பான யோசனையை கைவிடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பொருளாதாரத்தை மீட்டு, ஜனநாயகத்தை பலப்படுத்தவே ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டு மக்களும் இதனையே கோருகின்றனர். நாடு இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் இதர விடயங்கள் பற்றி பேசலாம்.
நாட்டை பிளவுபடுத்து, ஒற்றையாட்சிக்கு எதிரான எந்த விடயத்தையும் எமது கட்சி ஆதரிக்காது. அந்த நிலைப்பாட்டில் உள்ள நபர்களுக்கும் ஆதரவு வழங்கப்படமாட்டாது ” – என்றார்.










