“நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்கவின் வெற்றி உறுதியாகியுள்ளதால், அவருக்கு ஏதேனும் செய்யக்கூடும் என்ற ஐயம் உள்ளதால் அநுரவுக்கான பாதுகாப்பை பலப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துவருகின்றனர்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கருத்து வெளியிட்ட விஜித ஹேரத் மேலும் கூறியவை வருமாறு,
“ ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படுமா என கேள்விகள் எழுப்பட்டுவருகின்றன. எந்த தேர்தலை ஒத்திவைத்தாலும் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாது. ஆறில் ஐந்து பெரும்பான்மை பலம் இருந்தும் ஜே.ஆர். ஜயவர்தனவால் ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைக்க முடியாமல் போனது. சர்வஜன வாக்கெடுப்பை நடத்தி அவர் பொதுத்தேர்தலைதான் ஒத்திவைத்தார். எனவே, இந்த வருடம் செப்டம்பர் 17 மற்றும் ஒக்டோபர் 17 இற்குள் ஜனாதிபதி தேர்தல் நிச்சயம் நடைபெறும். இதில் வீண் குழப்பம் வேண்டாம்.
இந்த ரெண்டு தரப்புகளும் நாட்டை அழித்துவிட்டன, இம்முறை அநுரவுக்குதான் வாக்கு என கிராமங்கள்தோறும் மக்கள் திட்டவட்டமாக கூறிவருகின்றனர். வெற்றியில் எமக்கு சந்தேகம் கிடையாது. ஆனால் இந்த எட்டு மாத காலப்பகுதிக்குள் இவர்கள் ஏதேனும் துருப்பை அடித்து, தேசிய மக்கள் சக்தியின் வெற்றியை சீர்குலைக்கக்கூடும், கவனம் எனவும் மக்கள் எமக்கு கூறிவருகின்றனர்.
முடியாதபட்சத்தில் இவர்கள் அநுரவுக்கு எதையாவது செய்யக்கூடும், அப்படிபட்ட தரப்புதான் அந்த அணிகளில் அரசியல் செய்கின்றன, எனவே, அநுரவை பாதுகாக்கவும் எனவும் மக்கள் கோரிவருகின்றனர். ரணில், சஜித், சந்திரிக்கா என எல்லாம் குழம்பிபோயுள்ளனர். தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் நமது கதை முடிந்துவிடும் என புலம்பிவருகின்றனர். பகைமையை மறந்து அவர்கள் எல்லாம் ஒன்றிணைந்துள்ளனர்.” – என்றார்.










