இந்த வருடத்தின் கடந்த ஐந்து மாதங்களில் மாத்திரம் அநுராதபுரம் மாவட்டத்தில் இருந்து எச்.ஐ.வி/எய்ட்ஸ் வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்ட 13 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பாலியல் நோய்கள் தொடர்பான சுகாதார சேவைகளுக்கான நிலையத்தின் வைத்திய அதிகாரி ஹேமா வீரக்கோன் தெரிவித்துள்ளார்.

எய்ட்ஸ் தொற்று ஏற்படுவதற்கு பாதுகாப்பற்ற பாலுறவு முக்கிய காரணம் என்று திருமதி வீரக்கோன் இது பற்றிய கலந்துரையாடலில் வலியுறுத்தியுள்ளார். அநுராதபுரம் மாவட்டத்தின் கஹட்டகஸ்திகிலிய, தம்புத்தேகம, ஹொரவப்பொத்தான, அநுராதபுரம் மத்திய நுவரகம் பளாத்த மற்றும் மெதவச்சிய ஆகிய பகுதிகளிலேயே தொற்றுக்குள்ளான பலர் காணப்படுகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில் அனுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ள எச்.ஐ.வி தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், 2022 இன் முதல் 5 மாதங்களில் 13 பேர் பதிவாகியுள்ளனர். இது பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு எனலாம்.
சுமார் 20 வருடங்களுக்கு முன்னர் அநுராதபுரத்தில் இருந்து எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான முதலாவது நபர் பதிவாகியிருந்தார். அதன் பின்னர் மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்றினால் 2020 ஆம் ஆண்டில் மாத்திரம் 15 நோயாளர்கள் இனங்காணப்பட்டதன் மூலம் அதிகூடிய நோயாளர்கள் பதிவாகியிருந்தனர் என வைத்திய அதிகாரி ஹேமா வீரக்கோன் இது பற்றி தகவல் தெரிவித்தார்.
இதுவரை அநுராதபுரம் மாவட்டத்தில் பதிவாகியுள்ள மொத்த எச்.ஐ.வி தொற்றாளர்களில் சுமார் 10% வீதமானோர் மரணமடைகின்றனர். எச்.ஐ.வி நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சையளிப்பதன் மூலம் மக்கள் சிகிச்சைகளுடன் வாழ முடியும்.
ஆனால், எச்.ஐ.வி பற்றிய பரிசோதனை செய்வதில் பலர் ஆர்வம் காட்டாததால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய்த் தொற்றுகளின் பரவலைக் கட்டுப்படுத்தலாம். குறிப்பாக பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு இரத்தப் பரிசோதனை செய்ய நீங்கள் ஆசைப்பட்டால் அநுராதபுரம் பாலியல் நோய்கள் சுகாதார சேவைகளுக்கான மையத்துடன் தொடர்பு கொள்ளலாம். அந்த நிலையம் வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு பிரசாரங்களை மேற்கொண்டு வருகிறது.
அநுராதபுரத்தில் எச். ஐ. வி தொற்றுக்குள்ளான நபர்களுக்கான சிகிச்சையானது STD சுகாதார நிலையத்தின் ஊடாக முறையாக மேற்கொள்ளப்படுகின்றது. தேவையான அனைத்து மருந்துகளும் இலவசமாக இங்கு வழங்கப்பட்டு வருவதுடன், மருந்துகளை பெற்றுக் கொள்ள வரும் நோயாளர்களுக்கு பயணச் செலவும் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.
இது தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் இடம்பெறுகின்றது. அத்துடன் எச்.ஐ.வி. வைரஸால் பாதிக்கப்பட்ட நபர்களின் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்விக்கென பல்வேறு வழிகளில் உதவுவதும் ஒரு சிறப்பு அம்சமாகும்.
இலங்கையின் சிறந்த நான்கு STD சுகாதார நிலையங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அநுராதபுரம் மையத்தில், இலங்கை முழுவதிலும் இருந்து HIV நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சிகிச்சை பெறுகின்றனர். பரிசோதனைகள் அங்கு மேற்கொள்ளப்படுகின்றன. முற்றிலும் இரகசியம் காக்கப்பட்டுள்ள இந்த மையங்களுக்கு வாருங்கள், எச்.ஐ.வியில் இருந்து விடுபட தயங்காதீர்கள். பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் முக்கியம் என வைத்திய அதிகாரி ஹேமா வீரக்கோன் இது பற்றி வலியுறுத்தியுள்ளார். அவர்களைப் போன்று பாதுகாப்பற்ற பாலுறவில் ஈடுபடுபவர்கள், எதிர்காலத்தில் இலங்கையில் இருந்து வைரஸை ஒழிக்க உதவுமாறு மருத்துவ அதிகாரி ஹேமா வீரக்கோன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
