அநுர அரசு ஊழல்வாதிகளை பாதுகாக்கவில்லை: பொன்சேகா பாராட்டு!

” இலங்கைபோன்ற வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் நாட்டை நேசிக்கக்கூடிய – நாட்டு மக்களுக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய சர்வாதிகாரியொருவர் அவசியம்.” – என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய மக்கள் சக்தி அரசாங்கமானது இந்நாட்டை இதற்கு முன்னர் ஆண்ட அரசுகளைவிட 1000 மடங்கு சிறந்தது என்பதை எனது மனசாட்சியின் பிரகாரம் தெரிவிக்க முடியும். குறைந்தபட்சம் ஊழல் வாதிகளை பாதுகாக்காமல் இருப்பதற்குரிய முதுகெலும்பு இந்த ஆட்சிக்கு இருக்கின்றது. கடந்த காலங்களில் மோசடிகளில் ஈடுபட்டால் பண பலம் இருந்தால் இலகுவில் தப்பிக்க முடியும். ஆனால் இன்று அதற்கு தடைபோடப்பட்டுள்ளது.

சட்டத்தை அமுல்படுத்துவதற்குரிய முயற்சி இடம்பெறுகின்றது. நூற்றுக்கு 100 சதவீதம் வெற்றி இல்லை என்றபோதிலும் அதற்குரிய முயற்சியை பாராட்ட வேண்டும். நாட்டையும், நாட்டு மக்களையும் மேம்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களே எமக்கு அவசியம்.

ஆபிரிக்காவில் மிகவும் ஏழ்மையான நாடாக ரூவண்டா இருந்தது. ஆனால் இன்று ஆபிரிக்காவில் சிறந்த நாடாக அது மாறியுள்ளது. இரட்டை நட்சத்திரம் கொண்ட இராணுவ அதிகாரியொருவரே ஆட்சி பொறுப்பை ஏற்றிருந்தார்.

சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளும் அபிவிருத்தி கண்டுள்ளன. இந்நாடுகளில் இருந்தும் நாம் அனுபவங்களைப் பெறவேண்டும். அங்கிருந்த தலைவர்கள் நேர்மையுடன் செயற்பட்டனர். சட்டத்தை அமுல்படுத்தினர்.

எனவே, இலங்கைபோன்ற வீழ்ச்சியடைந்த நாட்டை மீட்க நல்லதொரு சர்வாதிகாரி இருக்க வேண்டும். அந்த சர்வாதிகாரி நல்ல சர்வாதியாகரியாக இருக்க வேண்டும். நாட்டை நேசிக்கும் சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். நாட்டுக்காக தன்னை அர்ப்பணிக்க கூடிய சர்வாதிகாரியாக இருக்க வேண்டும். மஹிந்தபோன்ற போலி தேசப்பற்றாளர் அல்லர். ஊழல், மோசடி அற்ற , நாட்டை நேசிக்ககூடிய சர்வாதிகாரி தேவை.” – என்றார்.

Related Articles

Latest Articles