” மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிவந்த தேசிய தலைவர் அமரர். ஆறுமுகன் தொண்டமானுக்கு அதிஉயர் சபையில் அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய அதேபோல் எங்களுக்கு ஆறுதல்கூறிய அனைத்து அரசியல் பிரமுகர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும், பிரதம அமைச்சரின் பெருந்தோட்ட இணைப்பாளருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.
இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மறைந்த தலைவர் அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கும் அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணைமீதான விவாதம் நேற்று (11) பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
அனுதாபம் தெரிவித்து உரையாற்றிய ஆளும், எதிரணி அரசியல் பிரமுகர்கள், இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸினதும், மறைந்த தலைவர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரினது அரசியல் மற்றும் தொழிற்சங்க வகிபாகத்தை பாராட்டி பேசியதுடன், மலையக மக்களுக்கான காங்கிரஸின் முக்கியத்துவத்தையும் பட்டியலிட்டுக்காட்டினர்.
இந்நிலையில் அனுதாபம் தெரிவித்த அரசியல் பிரமுகர்களுக்கு நன்றி தெரிவித்து செந்தில் தொண்டமானால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
” மறைந்த எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அனுதாபம் தெரிவிக்கும் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கும், சபை முதல்வர் தினேஷ் குணவர்தனவுக்கும், ஆளுங்கட்சி பிரதம கொறடாவான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கும், எதிரணி பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியல்லவுக்கும் தொண்டமான் குடும்பத்தின் சார்பிலும், மலையக மக்களின் சார்பிலும் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அத்துடன், எமது தலைவரின் கடந்தகால அரசியல் பயணத்தை நினைவூட்டி அவருடனான அனுபவங்களை பகிர்ந்துகொண்டு, இன,மத, குல, கட்சி பேதங்களுக்கு அப்பால் அவர் மக்களுக்கு ஆற்றியுள்ள சேவைகளை பாராட்டிய இலங்கைத் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் தேசிய மக்கள் கூட்டணி, ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக்கட்சி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பொதுஜன ஐக்கிய முன்னணி, தேசிய காங்கிரஸ் ஆகியவற்றின் தலைவர்களுக்கும், உறுப்பினர்களுக்கும் நன்றிகளை சமர்ப்பித்துக்கொள்கின்றேன்.
தலைவரின் மறைவால் சமுகமும், குடும்பமும் தவித்துக்கொண்டிருக்கையில் இரங்கல் தெரிவித்து, ஆறுதல்கூறி, அடுத்தக்கட்டம் நோக்கி பயணிப்பதற்கான நீங்கள் வழங்கிய ஆலோசனைகள் எங்களுக்கு உற்சாகமளிக்கின்றது. அதுமட்டுமல்ல எமது தலைவர்கள்மீது நாடும், அரசியல் தலைவர்களும் வைத்துள்ள நம்பிக்கையை கட்டிக்காக்கும் வகையில் அரசியல் பயணத்தை முன்னெடுப்போம். எனவே, அனைவருக்கும் மீண்டுமொருமுறை நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என்றார்.