அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சி, அடிபணியபோவதில்லை என்று ஈரானின் ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனெய் சூளுரைத்துள்ளார்.
” அணுசக்தி ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த ஈரானின் தலைமைக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது. அவர்கள் கலந்துரையாடலுக்கு மறுத்தால் இராணுவத்தைப் பயன்படுத்த வேண்டி இருக்கும்’ என்று ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கைக்கு பதிலளிக்கும் வகையிலேயே அலி காமெனெய் இவ்வாறு சூளுரைத்துள்ளார்.
‘ சில மிரட்டல் அரசாங்கங்கள் பேச்சுவார்த்தையை வலியுறுத்துவது பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அல்ல. அவர்களின் புதிய கோரிக்கைகளை முன்வைப்பதற்கான ஒரு பாதையாகும்.” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘ எம்மால் நிச்சயமாக ஏற்றுக்கொள்ளப்படாத புதிய கோரிக்கைகளை அவர்கள் எழுப்புகிறார்கள். அவர்களின் எதிர்பார்ப்புகளை ஈரான் நிச்சயமாக ஏற்காது. பேச்சுவார்த்தைகளில் ஈரானை மிரட்ட முடியாது. வற்புறுத்தல் மற்றும் மிரட்டலுக்கு எதிராக நிற்போம் என்றும் ஈரானின் ஆன்மீகத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
டரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்றதைத் தொடர்ந்து ஈரானின் எண்ணெய் கைத்தொழில் துறையை பூச்சிய நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார். இந்நிலையிலேயே அணுசக்தி பேச்சுவார்த்தைக்கு கடிதம் எழுதியுள்ளதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.