அமெரிக்கா, லூயிஸ்டனில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 22 பேர் பலியாகியுள்ளனர். அத்துடன் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அமெரிக்காவின் மெய்னே மாகாணத்தில் உள்ள லூயிஸ்டன் நகரில் இனந்தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்த கொடூர துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 22 பேர் பலியாகியுள்ளனர்.பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பில் வெளியாகியுள்ள புகைப்படங்களின் பிரகாரம், குறித்த மர்ம நபர் கையில் துப்பாக்கியை ஏந்தியபடி, சுடுவதற்கு தயாராக இருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கிறது. அந்தநபர் சம்பவத்திற்கு பின்னர் தப்பியோடியதாகவும் தெரிகிறது. அவரை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மர்ம நபரை பற்றிய தகவல் தெரிந்தவர்கள், அடையாளம் காட்டும்படி பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுள்ளனர். நகரின் 3 வெவ்வேறு இடங்களில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டில் கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது. 2022 ஆம் ஆண்டில் குறைந்தபட்சம் இதுபோன்ற 647 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
