அமெரிக்கா உட்பட கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை!

ஆஸ்திரேலியா உட்பட அமெரிக்காவின் கூட்டணி நாடுகளுக்கு வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்படி ஆசிய பசிபிக் பகுதியில் இராணுவ தலையீட்டை உடனடியாக நிறுத்தி கொள்ளுமாறு வடகொரியா வலியுறுத்தியுள்ளது.

இங்கிலாந்து, கனடா, ஜேர்மனி, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில், கொரிய தீபகற்ப பகுதியருகே கடல்வழி பகுதிகளில் தென்கொரியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் கூட்டாக ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டன.

தென்கொரியா மற்றும் ஜப்பானுடன் சேர்ந்து கடந்த மாதம் அமெரிக்காவும் 2 நாட்கள் கடற்படை பயிற்சியில் ஈடுபட்டது. இந்த மாத தொடக்கத்தில், ஆஸ்திரேலியாவின் ஹெலிகாப்டர் ஒன்று வடகொரிய பகுதியில் ஆய்வில் ஈடுபட்டது. இதனை சர்வதேச வான்வெளியில் வைத்து சீனாவின் போர் விமானம் வழிமறித்தது.

கடந்த அக்டோபரில், இதேபோன்ற சூழலில், கனடாவின் விமானம் ஒன்று இடைமறிக்கப்பட்டது.வடகொரியாவுக்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு சபையின் தடை மற்றும் தீர்மானங்களை அமுல்படுத்தும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது என தென்கொரியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அப்போது தெரிவித்தது.

இந்நிலையில், ஐ.நா.வின் தடைகளை மீறும் செயலை கண்காணிக்கிறோம் என்ற பெயரில் அமெரிக்காவின் நட்பு நாடுகள், ஆசிய பசிபிக் பகுதியில் ராணுவ தலையீட்டில் ஈடுபடும் செயலை உடனடியாக நிறுத்தி கொள்ள வேண்டும் என வடகொரியா கூறியுள்ளது.

வடகொரியா தன்னுடைய இறையாண்மையை பாதுகாக்க முழு அளவிலான தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் எச்சரித்துள்ளது.

மேற்கத்திய நாடுகள் காரணமேயின்றி மற்றும் கண்மூடித்தன கொள்கைகளால் அமெரிக்காவை பின்பற்றுவது என்பது அவர்களுடைய சொந்த நலன்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் செயலாகும் என்ற உண்மையை புரிந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என்றும் வடகொரியா தெரிவித்து உள்ளது.

Related Articles

Latest Articles