முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்ட கெஹலிய ரம்புக்வெல்ல, மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் இன்று முற்படுத்தப்பட்டார். இதன்போதே விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சுகாதார அமைச்சரும், தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்றிரவு கைது செய்யப்பட்டார்.
சர்ச்சைக்குரிய மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கைது செயய்ப்பட்டார்.
சர்ச்சைக்குரிய Human Immunoglobulin மருந்து கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக சிஐடிக்கு வருமாறு கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், அவர் அதனை தவிர்த்து வந்தார். கூட்டங்கள் இருப்பதை காரணம் காட்டினார்.
இந்நிலையில் இது தொடர்பில் நீதிமன்றத்தில் கருத்து முன்வைக்கப்பட்டது. அமைச்சர் வேண்டுமென்றே தவிர்த்துவருகின்றார் என சுட்டிக்காட்டப்பட்டது. இதனையடுத்து குற்ற புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்குமாறு அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டிருந்தது.
அத்துடன், அமைச்சருக்கு வெளிநாட்டு பயணத் தடையும் விதிக்கப்பட்டது.
இதனையடுத்து கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று சிஐடியில் முன்னிலையானார். அவரிடம் சுமார் 10 மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதன்பின்னரே கைது இடம்பெற்றுள்ளது.
இதற்கு முன்னர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் சிஐடியினர் அவரின் வீட்டுக்கு சென்றே வாக்குமூலம் பெற்றிருந்தனர். இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதேபோல அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை கைது செய்யுமாறு சிவில் அமைப்புகளும் போராடிவந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் காரணமாகவே கெஹலிய ரம்புக்வெல்லவிடம் இருந்து சுகாதார அமைச்சு பறிக்கப்பட்டு, அது ரமேஷ் பத்திரணவிடம் கையளிக்கப்பட்டது.