நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள சகல நிறுவனங்களும் பூரணமான கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும். அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நேற்று (04) அமைச்சின் செயலாளர்களுக்கு பணிப்புரை வழங்கினார்.
கடந்த அரசாங்கத்தில் தமது அமைச்சின் கீழ் உள்ள 21 நிறுவனங்களிலும் நடந்ததாகச் சொல்லப்படுகின்ற முறைகேடுகள் பற்றி தனக்கு முறைப்பாடுகள் வந்திருப்பதாகவும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் செய்த குப்பைகளுக்கெல்லாம் பொறுப்பேற்க முடியாது என்பதால் தாம் இந்த முடிவை எடுத்ததாக அமைச்சர் தெரிவித்தார். அமைச்சர் மேலும் கூறியதாவது:
நிறுவனம் பாதுகாக்கப்பட்டால் அதன் ஊழியர்களும் பாதுகாக்கப்படுவார்கள். அதனால் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக செயற்படுகின்ற அதே நேரம் தாம் வேலை செய்கின்ற நிறுவனத்தைப் பாதுகாப்பதற்கும் நாங்கள் அறிந்திருக்க வேண்டும். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் 137 மில்லியன் ரூபாவுக்கான போஸ்ட்டர் அச்சிடப்பட்டிருக்கிறது. அது பற்றி நீதிமன்றத்தில் வழக்கொன்று விசாரணையில் இருக்கின்றது. அது ஒரு வீண்விரயம். வழக்குக்கு உரிய பொருட்கள் என்பதால் அந்த போஸ்ட்டர்களை நம்மால் அழிக்கவும் முடியாது. அந்த போஸ்ட்டர்கள் தானாகவே மக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்த நிறுவனத்தைப் பூரண கணக்காய்வுக்கு உட்படுத்த வேண்டி இருக்கின்றது. அதே போன்று ஊழல், முறைகேடுகள் பற்றி ஒரு விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும். நான் இந்த நிறுவனத்தை அழிப்பதற்கோ ஊழியர்களின் நலனுக்கு கெடுதல் ஏற்படுகின்ற வேலைகளைச் செய்வதோ இல்லை. எனினும் மற்றவர்கள் செய்த பாவங்களை என்னால் சுமக்க முடியாது என்றார்.
அமைச்சின் ஒவ்வொரு நிறுவனமும் கணக்காய்வுக்கு உட்படுத்தப்படும்










