இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சிரேஷ்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், மலையக மக்களை தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் செயலணியின் தலைவராகவும் வடிவேல் சுரேஷ் நியமிக்கப்பட்டுள்ளார் என அவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த பொதுத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பதுளை மாவட்டத்தில் போட்டியிட்டு வடிவேல் சுரேஷ் வெற்றிபெற்றார். எனினும், பசறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்துக்கு சஜித் வராததால், அவருக்கும், சஜித்துக்கும் இடையில் அரசியல் மோதல் ஏற்பட்டது.
தமது மக்களிடம் சஜித் பிரேமதாச பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும் என வடிவேல் சுரேஷ் வலியுறுத்திவந்தார்.
இந்நிலையில் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்த வடிவேல் சுரேஸை கட்சியில் இருந்து இடைநிறுத்தும் முடிவை ஐக்கிய மக்கள் சக்தி எடுத்தது. அத்துடன், பசறை தொகுதிக்கு அண்மையில் புதிய அமைப்பாளர் ஒருவரையும் சஜித் பிரேமதாச நியமித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே வடிவேல் சுரேஷ் எம்.பிக்கு ஜனாதிபதியால் புதிய பதவி வழங்கப்பட்டுள்ளது.










