இலங்கையில் சீதா எலிய ஆலயத்தில் இருந்து இந்திய நாட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள புனித கல், நாளை மறுநாள் (29.10.2021) உத்தர பிரதேச முதலமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது என்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சீதாஎலிய சீதையம்மன் ஆலயத்தின் அறங்காவலர் சபை தலைவருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்,
” இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் கலாச்சார உறவை மேம்படுத்தும் முகமாக இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ள இராமர் ஆலயத்திற்கு இலங்கையின் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இருந்து புனித கல் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இராமயணத்துடன் தொடர்புகளை கொண்ட சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயமானது சர்வதேச மட்டத்தில் மிகவும் பிரபல்யமான ஆலயமாகும். உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் இந்த ஆலயத்தை தரிசிப்பதற்காக வருகை தருகின்றனர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியில் அயோத்தியில் இராமர் ஆலயம் ஒன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகள் தற்பொழுது மிகவும் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அங்கு அமைக்கப்படுகின்ற இராமர் ஆலயத்தில் கட்டிடத்திற்கு பிரதிஸ்டை செய்வதற்காக சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தில் இருந்து பெறப்பட்ட புனதி கல் ஆயலத்தில் தொடர்ச்சியாக பூஜை செய்யப்பட்ட கொழும்பிற்கு கொண்டு வரப்பட்டு தற்பொழுது அந்த கல் இந்தியாவிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்த புனித கல்லை இரண்டு நாடுகளுக்கும் இடையில் உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற நிகழ்வு நாளை மறுதினம் (29.10.2021) உத்தர பிரதேசத்தில் இடம்பெறவுள்ளது.
இலங்கையின் சார்பாக இலங்கைத்தூதுவர் மிலிந்த மொரகொட இந்தியாவின் சார்பாக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகிய இருவரும் கலந்து கொள்வதுடன்.இலங்கையில் இருந்து செல்கின்ற குழவினரும் இவர்களுடன் இணைந்து கொள்கின்றனர்.
இதன்போது இலங்கை தூதுவர் உத்தியோகபூர்வமாக புனித கல்லை உத்தர பிரதேச முதலமைச்சரிடம் கையளிப்பார்.பின்பு இது ஆலயத்தின் கட்டுமான பணிகளின் பொழுது இந்த கல் பிரதிஸ்டை செய்யப்படும்.
இதன் மூலமாக இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கலாச்சார உறவுகள் மேலும் வலுப் பெறுவதுடன் இந்தியாவில் இருந்து சீதையம்மன் ஆலயத்திற்கு சுற்றுலா பிரயாணிகளை அதிக அளவில் அழைத்து வருவதற்கான விசேட எற்பாடுகளும் முன்னெடுக்கப்படவுள்ளது.
ஆண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய வெளியுறவு செயலாளர் சீத்தாஎலிய சீதையம்மன் ஆலயத்தை மேலும் அபிவிருத்தி செய்வதற்காக இந்திய அரசாங்கத்தின் நிதி உதவி பெற்றுத் தரப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.










