அரசியலில் களமிறங்குவாரா “திருமதி இலங்கை அழகி” புஷ்பிகா டி சில்வா?

” அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது இல்லை. அது தொடர்பில் எதிர்காலத்தில் சிந்திக்கலாம். விரும்பம் இல்லை என ஒரேடியாக கூறிவிடவும் முடியாது.” – என்று திருமதி இலங்கை அழகிப் போட்டியில் வெற்றியாளராக தெரிவு செய்யப்பட்டு புஷ்பிகா டி சில்வா இன்று தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அத்துடன், தான் விவாகரத்து பெற்ற பெண் கிடையாது என குறிப்பிட்ட அவர், விவாகரத்து பெற்ற பெண்கள்கூட இவ்வாறான நிகழ்வில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது தொடர்பில் தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிப் போட்டியின் இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருமதி இலங்கை அழகிப் போட்டியின் வெற்றியாளராக திருமதி புஷ்பிகா டி சில்வா என்பவர் தெரிவு செய்யப்பட்டதை, நிகழ்ச்சி தொகுப்பாளர் அறிவித்தார்.அதையடுத்து, புஷ்பிகா டி சில்வாவிற்கு, திருமதி இலங்கை படத்துக்கான கிரீடம் சூட்டப்பட்டது.

கிரீடம் சூட்டப்பட்டு, ஓரிரு நிமிடங்களில், திருமதி உலக அழகு ராணியான கரோலின் ஜுரி, இந்த கிரீடத்தை பெறுவதற்கு புஷ்பிகா டி சில்வா தகுதியற்றவர் என அறிவித்தார்.

திருமணமாகி, விவாகரத்தான பெண்ணொருவருக்கு இந்த கிரீடத்தை வழங்க முடியாது என கரோலின் ஜுரி, மேடையில் பகிரங்கமாகவே அறிவித்திருந்தார்.

இவ்வாறு கரோலின் ஜுரி அறிவித்திருந்த நிலையில், புஷ்பிகா டி சில்வாவிற்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை, கரோலின் ஜுரி மேடையிலேயே மீளப் பெற்றுக்கொண்டார்.

கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட கரோலின் ஜுரி, அதே மேடையில் இரண்டாவது இடத்தை (ஃபர்ஸ்ட் ரன்னர்-அப்) பெற்றவருக்கு அந்த கிரீடத்தை அணிவித்திருந்தார். இந்த நிலையில், மேடையில் அமைதியின்மை ஏற்பட்டது. இவ்விவகாரம் பேசு பொருளாகவும் மாறியது.

இந்நிலையில் குறித்த பட்டம் புஷ்பிகா டி சில்வாவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.

Paid Ad