அரசியல் களத்தில் குவியும் ஜனாதிபதி வேட்பாளர்கள்!

எதிர்வரும் செப்டம்பர் 21 ஆம் திகதி நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படும் வேட்பாளர்களின் எண்ணிக்கை இதுவரை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மைத்திரி அணி சார்பில் அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மௌபிம ஜனதா கட்சியின் தலைவரான தொழிலதிபர் திலித் ஜயவீர ஆகியோரும் களமிறங்கவுள்ளனர்.

தொழிலதிபர் தம்மிக்க பெரேரா, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க மற்றும் மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தம்மரதன தேரர் ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க விருப்பத்தை வெளியிட்டுள்ளனர்.

இது தவிர வடக்கில் உள்ள தமிழ் தேசியக் கட்சிகள் பொது வேட்பாளரையும் நிறுத்த உள்ளது. முன்னிலை சோசலிசக் கட்சியும் கூட்டணி சார்பாக வேட்பாளரை நிறுத்தவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட உத்தேசித்துள்ளார். ஐக்கிய சோசலிசக் கட்சியின் சார்பில் சிறிதுங்க ஜயசூரியவும் களமிறங்கவுள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்ககூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles