“அரசின் ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தி வெளிப்படையாகவே விமர்சனங்களை முன்வைக்கும் எதிரணி அரசியல் தலைவர்களின் குடியுரிமையை பறிக்கும் ‘அரசியல் பழிவாங்கல் வேட்டையில்’ தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனவே, அரசின் இந்த முயற்சியை ஜனநாயக வழியில் தோற்கடிப்பதற்கு அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் .”
இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அறைகூவல் விடுத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ அரசின் குறைப்பாடுகளை சுட்டிக்காட்டி, ஊழல், மோசடிகளை அம்பலப்படுத்தி விமர்சனங்களை முன்வைக்கும் எதிரணி அரசியல் தலைவர்களை தற்போதைய அரசு குறிவைத்துள்ளது. அவர்களுக்கு எதிரான அரசியல் பழிவாங்கல் வேட்டையை ஆரம்பித்துள்ளது. குறிப்பாக சிவில் மற்றும் ஜனநாயக உரிமைகளை பறிப்பதற்கான திட்டம் தீட்டப்பட்டுவருகின்றது.
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறும், நாடாளுமன்றத்தில் முன்வைக்குமாறும் நாம் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். அது தொடர்பில் விவாதம் வேண்டும் எனவும் கோரிவருகின்றோம். ஆனால் அறிக்கை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை.
அதுமட்டுமல்ல குறித்த ஆணைக்குழுவின் அறிக்கைக்கு மேலதிகமாக விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் சம்பந்தமாக 3 மாதங்களுக்குள் அக்குழு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் எனக்கூறப்பட்டுள்ளது. அப்படியானால் முதலாவது அறிக்கையை வெளியிடுவதில் அரசு ஏன் தயக்கம் காட்டுகின்றது, எதனை மூடிமறைப்பதற்கு முயற்சிக்கின்றது ?
எதுஎப்படி இருந்தாலும் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் குறித்த அறிக்கை சபையில் சமர்ப்பிக்கப்படவேண்டும், அவ்வாரமே விவாதமும் நடத்தப்படவேண்டும்.
அதேவேளை, இந்த அரசின் நோக்கம் என்ன என்பது எமக்கு தெரிகின்றது. அதனை தெளிவாகவும் ஊகிக்க முடிகின்றது. எதிரணி அரசியல் பிரமுகர்களை மெளனிக்க வைப்பதற்காக முன்னெடுக்கப்படும் நடவடிக்கையை அனைவரும் இணைந்து ஜனநாயக வழியிலும், அரசமைப்பின் பிரகாரமும் தோற்கடிக்க முன்வரவேண்டும். கட்சி, பேதங்களுக்கு அப்பால் ஜனநாயகத்துக்காகவும், சிவில் உரிமைகளை பாதுகாத்துக்கொள்ளவும் ஓரணியில் திரள வேண்டும்.
தேர்தலில் மோதுவதற்கு அச்சம் காரணமாகவே சிவில் உரிமையான குடியுரிமையில் கைவைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது. இந்நாட்டின் நீதிமன்ற கட்டமைப்புமீது எமக்கு நம்பிக்கை உள்ளது. அதற்கும் அழுத்தங்களை கொடுப்பதற்கு அரசு முயற்சித்தால் அதனை அனுமதிக்கமுடியாது.” – என்றார்.