வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைமீது ஜுலை 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு 20 ஆம் திகதிமாலை வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு சபாநாயகர் மஹிந்தயாப்பா அபேவர்தன தலைமையில் கூடியபோதே இந்த முடிவு எட்டப்பட்டது.
எரிபொருட்களின் விலை அதிகரிப்பையடுத்து அதனை அடிப்படையாகவும் மேலும் சில காரணங்களை முன்னிலைப்படுத்தியும் வலுசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கடந்த மாதம், ஐக்கிய மக்கள் சக்தியால் கையளிக்கப்பட்டது.
இப்பிரேரணையை தோற்கடிப்பதற்கான பெரும்பான்மையை அரசு கொண்டிருந்தாலும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள பஸில் ஆதரவு அணி உறுப்பினர்கள் எத்தகைய முடிவை எடுப்பார்கள் என இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டணி உள்ளிட்ட எதிரணிகள் எதிர்த்து வாக்களிக்கவுள்ளன. தமிழ்க் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, விக்கி அணி ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ முடிவு இன்னும் வெளிவரவில்லை.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வசம் 145 ஆசனங்கள் உள்ளன. கூட்டு கட்சிகளையும் சேர்த்து 149 ஆசனங்கள் உள்ளன. எனவே, 140 இற்கும் குறைவான வாக்குகளை அரசு பெறும்பட்சத்தில் அது கூட்டணி அரசுக்கான பின்னடையாகவே கருதப்படும். சிலவேளை பஸில் அணி உறுப்பினர்கள் சிலர் வாக்கெடுப்பில் பங்கேற்காவிட்டால்கூட அது அரச கூட்டணிக்குள் உள்ள குழப்பத்தை வெளிப்படுத்தும்.
சிலவேளை, 20 இற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் எம்.பிக்களின் ஆதரவையும் பெற்று மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு அதிக வாக்குகளை பெற்று பிரேரணையை ஆளுந்தரப்பு தோற்கடித்தால் அது கூட்டணி ஒற்றுமையை வெளிப்படுத்துவதாக அமையும்.
அரசுமீது மக்கள் தற்போது அதிருப்தியில் உள்ளனர். எனவே, இரண்டாவது தேர்வையே பஸில் தரப்பும் விரும்பும் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.