2024 ஏப்ரல் முதல் அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவிருந்த வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாவை ஜனவரி மாதம் முதலே வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகின்றது என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 2024 ஜனவரி முதல் ஏப்ரல்வரை 5 ஆயிரம் ரூபா வீதம் வழங்குவதற்கான முயற்சி இடம்பெற்றுவருகின்றது எனவும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 2 ஆயிரத்து 500 ரூபாவையும் ஜனவரி முதலே வழங்குவதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றுவருகின்றன எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு வரவு – செலவுத் திட்டம் மூலம் 10 ஆயிரம் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரச ஊழியர்களுக்கு தற்போது 7 ஆயிரத்து 800 ரூபா வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக வழங்கப்படும் நிலையில், அடுத்த வருடம் முதல் 17 ஆயிரத்து 800 ரூபாவை வாழ்க்கைச்செலவு கொடுப்பனவாக பெறுவார்கள்.
2024 ஏப்ரல் மாத சம்பளத்தில் இருந்துதான் இந்த அதிகரிப்பு இடம்பெறும். எனவே, ஜனவரி முதல் மார்ச் வரையான நிலுவை கொடுப்பனவு 2024 ஒக்டோபர் மாதத்தில் இருந்து தவணை அடிப்படையில் ஆறு மாதங்களுக்குள் வழங்கப்படும் என பாதீட்டு உரையில் ஜனாதிபதி அறிவித்திருந்தார்.
அதேவேளை , அரச ஓய்வூதியம் பெறுவோருக்கு தற்போது வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக மாதாந்தம் 3 ஆயிரத்து 525 ரூபா வழங்கப்படுகின்றது. அரச ஓய்வூதியதாரர்களின் மாதாந்த வாழ்க்கைச்செலவுக் கொடுப்பனவு 6 ஆயிரத்து 25 ரூபா வரை அதிகரிக்கப்படும். இந்த அதிகரிப்பு 2024 ஏப்ரல் மாதம் முதல் அமுல்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையிலேயே ஜனவரி முதல் இதனை நடைமுறைப்படுத்த முயற்சி இடம்பெறுகின்றது.