அரச பெருந்தோட்ட கம்பனிகளின் தொழிலாளர்களுக்கும் 1,000 ரூபாவை பெற்றுக்கொடுக்க இ.தொ.கா நடவடிக்கை!

அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளத்தை பெற்று கொடுப்பதற்கான நடவடிக்கை கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது என்று பெருந்தோட்டங்களுக்கான பிரதமரின் ஒருங்கிணைப்புச் செயலாளரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு, ஆயிரம் ரூபாய் நாள் சம்பள அதிகரிப்பு கிடைக்கவில்லை என்று தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்வொன்றில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த செந்தில் தொண்டமான், அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் சம்பள உயர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதனைத் தொடர்ந்து, அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் (எஸ்.எல்.எஸ்.பி.சி) தலைவரைத் தொடர்புகொண்டு, ஆயிரம் ரூபாய் கொடுப்பனவுக்கான தாமதம் தொடர்பில் செந்தில் தொண்டமான் கேள்வி எழுப்பிய போது, இரண்டு வாரங்களுக்குள் அந்தச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கு, எஸ்.பி.சி தலைவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச் சபை (ஜே.ஈ.டீ.பீ) எல்கடுவ பிளாண்டேஷன் உள்வாங்கப்பட்டுள்ள அமைச்சின் செயலாளருடனும் தொடர்புகொண்டு, இந்த விவகாரம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கான மேலதிக நிதியைத் திறைசேறியிலிருந்து பெற்றுக்கொள்வதற்காக, விவசாய அமைச்சும் பெருந்தோட்ட அமைச்சும் இணைந்து, கூட்டு அமைச்சரவைப் பத்திரமொன்றை அடுத்த வாரம் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, செந்தில் தொண்டமானிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறான அமைச்சரவை அனுமதி கிடைத்தவுடன், திறைசேறியிலிருந்து பெற்றுக்கொள்ளப்படும் நிதியை, அந்தந்த தோட்ட நிர்வாகங்களிடம் கையளித்து, நிலுவைச் சம்பளத்தைத் தொழிலாளர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செந்தில் தொண்டமானிடம் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஓரிரு வாரங்களுக்குள், அரச பெருந்தோட்டக் கம்பனிகளின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்று, செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Paid Ad