அரச மாளிகையில் இருந்து வெளியேறிய மஹிந்த: அரசியல் கோட்டை நோக்கி பயணம்!

 

கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள அரச வதிவிடத்தில் இருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று வெளியேறினார்.

இன்று பிற்பகல் அவர் வெளியேறும்போது, அப்பகுதியில் மொட்டு கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஒன்றுகூடி இருந்தனர்.
அத்துடன், மஹிந்த ராஜபக்ச வெளியேறுவதற்கு முன்னர் அவரை வெளிநாட்டு இராஜதந்திரிகள் சிலரும் சந்தித்திருந்தனர்.

இவ்வாறு வெளியேறும் மஹிந்த ராஜபக்ச, தங்காலையிலுள்ள தனது கால்டன் இல்லத்தில் குடியேறவுள்ளார். அவரை அங்கு வரவேற்பதற்குரிய ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளுக்குரிய சிறப்புரிமைகள் அனைத்தும் நீக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அறிவித்திருந்தது. இதற்கமைய அரச மாளிகையில் இருந்து வெளியேறுமாறு மஹிந்த ராஜபக்சவுக்கு ஊடக சந்திப்புகள்மூலம் வலியுறுத்தப்பட்டது.

எனினும், தனக்கு சட்டப்பூர்வமாக அறிவித்தால் மட்டுமே அது பற்றி பரிசீலிக்க முடியும் என மஹிந்த ராஜபக்ச அறிவித்திருந்தார். இதனால் இவ்வீடு விவகாரம் அரசியல் ரீதியிலும் பேசுபொருளானது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே ஜனாதிபதிகளுக்குரிய உரித்துரிமைகளை நீக்குவதற்குரிய சட்டமூலம் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை சபாநாயகர் சான்றுரை படுத்தியுள்ளதால் சட்டம் நேற்று முதல் அமுலுக்கு வந்துள்ளது.

இதனையடுத்தே அரச மாளிகையில் இருந்து இன்று மஹிந்த வெளியேறினார்.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தங்காலையே ராஜபக்சக்களின் பூர்வீகம், அரசியல் கோட்டை. அங்கிருந்தே மஹிந்தவின் அரசியல் பயணம்கூட ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles